கதாநாயகன்–கதாநாயகி: ராகவா லாரன்ஸ்–டாப்சி, நித்யா மேனன்.
டைரக்ஷன்: ராகவா லாரன்ஸ்.
கதையின் கரு: பழிவாங்கும் பேய்கள்.
இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் இடையே யாருக்கு முதல் இடம்? என்பதில் போட்டி. முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சுஹாசினியின் தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறது. எதிர் தொலைக்காட்சி பக்தியை பிரதானமாக வைத்து முதல் இடத்தை பிடித்ததால், பேய் பீதியை ஏற்படுத்தி மீண்டும் முதல் இடம் பிடிப்பது என்று முடிவெடுக்கிறது, சுஹாசினியின் தொலைக்காட்சி.
அந்த தொலைக்காட்சியில் டாப்சி டைரக்டராகவும், பேய் பயம் கொண்ட லாரன்ஸ் ஒளிப்பதிவாளராகவும் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே காதல். லாரன்ஸ்–டாப்சி படக்குழுவினர் மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு இருட்டு பங்களாவை படப்பிடிப்புக்காக தேர்வு செய்கிறார்கள். அங்கே படப்பிடிப்பு நடத்தும்போது, மிரட்டலான சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன.
டாப்சி, ஒரு மந்திரவாதியை அணுகுகிறார். படப்பிடிப்பு நடத்தும் பங்களாவில் நிஜமாகவே பேய் இருக்கிறது என்று மந்திரவாதி திகிலூட்டுகிறார். பங்களாவுக்குள் இருக்கும் பேய் டாப்சியை பிடிக்கிறது. இன்னொரு பேய் லாரன்சை பிடிக்கிறது. இரண்டு பேய்களுக்கும் ‘பிளாஷ்பேக்’ இருக்கிறது.
அந்த முன் கதையில், ஆதரவற்ற மாற்று திறனாளி பெண்ணாக நித்யா மேனன் வருகிறார். அவரை காதலிக்கும் சண்டியராக இன்னொரு லாரன்ஸ் வருகிறார். இவர்களுக்கு வில்லன்களாக ஜெயப்பிரகாஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவரும் வருகிறார்கள். இவர்களால் லாரன்சும், நித்யா மேனனும் கொலை செய்யப்படுகிறார்கள். லாரன்சின் ஆவியும், நித்யா மேனனின் ஆவியும் சேர்ந்து வில்லன்களை எப்படி பழிவாங்குகின்றன? என்பது பயமுறுத்தும் ‘கிளைமாக்ஸ்.’
அடிதடிக்கு அஞ்சாத மொட்டை சிவாவாகவும், பேய்க்கு பயந்த கேமராமேன் ராகவாவாகவும் இரண்டு வேடங்களில் வருகிறார், ராகவா லாரன்ஸ். சண்டைக்கு சிவா. கலகலப்புக்கு ராகவா. இரண்டு பேரில் கழிவறைக்கே காவலாளியை நியமித்துள்ள ‘ராகவா’ கதாபாத்திரம், சிரிக்க வைக்கிறது. ராகவாவும், அம்மா கோவை சரளாவும் சேர்ந்து நடத்தும் நகைச்சுவை ரகளைகள், ஆரவாரமானவை. பேய் என்றாலே பக்கத்தில் நிற்கும் பெண்களின் இடுப்பில் போய் தொற்றிக் கொள்ளும் காட்சிகளில், ராகவா லாரன்ஸ் கைதட்டலை அள்ளுகிறார்.
டாப்சி, தொப்புள் காட்டி நடனமும் ஆடுகிறார். கறுப்பு பற்களும், கோர முகமாகவும் பயமுறுத்தவும் செய்கிறார். இவரை விட, மாற்று திறனாளியாக வரும் நித்யா மேனன் அனுதாபத்தையும், ஆதரவையும் அள்ளுகிறார். டாக்டர் பிரசாத்தாக வரும் ஸ்ரீமன், கழிவறையின் காவலாளியாக வரும் மயில்சாமி, லைட் மேன்களாக வரும் மனோபாலா, சாம்ஸ் ஆகியோர் கூடுதல் கலகலப்பூட்டுகிறார்கள்.
ராஜவேல் ஒளிவீரனின் கேமராவும், தமனின் பின்னணி இசையும் திகிலூட்டுகின்றன. படம் மூன்று மணி நேரம் ஓடுவதால், சில காட்சிகள் நெளிய வைக்கின்றன. முதல் பாதி, சூப்பர் வேகம். இரண்டாம் பாதி, நீளம் அதிகம். முனி கோவிலில் பேயும், பேயும் மோதிக்கொள்ளும் உச்சக்கட்ட காட்சி, சிலிர்க்க வைக்கிறது.