ஓர் இந்திய திரைப்படம் முதன்முறையாக 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது. கடவுளை கேள்வி கேட்ட படத்தை கடவுள் காப்பாற்றி விட்டார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘PK’ வெளியானபோதே ‘இருநூறு கோடி லட்சியம், நூறு கோடி நிச்சயம்’ என்கிற கோஷம்தான் கேட்டது. ஆனால், சுனாமியாய் ஓவர்சீஸில் இருந்து வசூல் வானத்தை கீறிக்கொண்டு கொட்டிக் குவியுமென்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. ஒட்டுமொத்த வசூலில் இருநூற்றி ஐம்பது கோடி ரூபாய், அயல்நாடுகளின் பங்கு. ‘PK’வுக்கு முன்பு வசூலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தது ‘தூம்-3’ (அதுவும் அமீர்கான் நடித்த படம்தான்).குறிப்பாக, சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்ட ‘PK’ சக்கைப்போடு போடுகிறது. நம் பிரதமர் நரேந்திரமோடி சீனாவுக்கு சென்றிருந்தபோது, அவருடனேயே‘PK’வும் சென்றிருந்தான். கடந்த மே 13 அன்றுதான் ஷாங்காய் நகரில் படத்தின் ப்ரீமியர் காட்சி. நாயகன் அமீர்கான், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர் வினோத் சோப்ரா ஆகியோர் அங்கேயே முகாமிட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு சீனா முழுக்க சுற்றுப்பயணம் செய்து படத்தை பிரமோட் செய்தார்கள். சுமார் 4,600 அரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘PK’வுக்கு சீன ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ். சீனாவில் முதன்முதலாக 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கும் இந்திய திரைப்படம் ‘PK’தான். சில வருடங்களுக்கு முன்பு அங்கே இதே அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘த்ரீ இடியட்ஸ்’ திரைப்படமும் நல்ல வசூலை வாரிக் குவித்திருந்தது.மதத்தையும், கடவுளையும் நுட்பமாக பகடி செய்து, தர்க்கரீதியான கேள்விகளை கேட்ட ‘PK’வை இங்கே சில மதவெறியர்கள் எதிர்த்தார்கள்.ஆனால் -உலகத்துக்கு அவனது அருமை தெரிந்திருக்கிறது.