தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டி அவர் மகிழ்ந்துள்ளார்.
தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவரது மனைவி மெலின் ஜெனி நிறை மாத கர்ப்பமாக இருந்தார்.
நேற்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை புறநகர் பகுதியான சான்டா க்ரூசில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மதியம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.71 கிலோ எடை இருந்தது. குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததையடுத்து ஜான்டி ரோட்ஸ் மகிழ்ச்சியில் திளைத்தார்.
அதோடு குழந்தை இந்தியாவில் பிறந்ததால் குழந்தைக்கு ‘இந்தியா’ ஜென்னி ஜான்டி ரோட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் பிறந்தது என்பது கூடுதல் தகவல் தண்ணீருக்குள் வைத்து பிரசவிப்பதற்காக கடந்த 3 மாதங்களாக ஜான்டி ரோட்சின் மனைவி பயிற்சி பெற்று வந்தார். தண்ணீரில் குழந்தையை பெற்றெடுப்பது தாய்க்கு பிரசவ வலியை வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டியான் நாஷ் தனது குழந்தைக்கு இந்தியா லில்லி என்று பெயர் சூட்டியிருந்தார்.