Entertainment Story Tamil

வர வர காதல் கசக்குதையா……!

இப்போதெலாம் காதல் திருமணம் என்பது ஃபாஷனாகி விட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தோழமை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிகரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இருவீட்டாரின் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் நடக்கிறது.

இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையாது, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்லனை எதிர்த்து காதலி கையை பிடிக்கும் சுவாரஸ்யமே தனி தான்.

முன்பெல்லாம் காதல் வயப்பட்டதும் அதை காதலியிடம் தெரிவிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். இப்பது நிலைமை அதற்கு எதிர்மறையாக உள்ளது. காதலன் காதலியிடம் காதலை சொல்ல மொபைல், மெயில், பேஸ்புக், சாட்டிங் என தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கைகொடுக்கின்றன.

எதுவும் ஈசியாக கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பதை போல, ஒருவரின் வாழ்வில் ” காதல்” என்னும் அத்தியாயம் இருந்தது என்பதை அவர் உணர்வதற்குள் அது காணாமல் போய்விடுகிறது. இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் பொருந்தும்

காதலி காதலுக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாள், இருவருக்கும் கை நிறைய சம்பளம், பெற்றோருக்கு சம்மதம், கல்யாண வயது முடியும் தருவாய் என பலவற்றையும் காரணம் காட்டி அன்பு காதலியை அவசர மனைவியாக மாற்றிவிடுகிறார்கள்.

இவ்வாறு கைபிடிக்கும் காதலர்கள் திருமண நாள் முதல் வேறு விதமான நிதர்சன உண்மைகளை சந்திக்க நேரிடுகிறது. காதலிக்கும் வரை அன்பாகவும் பாசமாகவும் பழகிய காதலி/காதலன், திருமணதிற்கு பின் காலை முதல் மாலை வரை கோபத்தின் உச்சியில் இருப்பதுபோல தோன்றும்.

இதுவே நாளடைவில் கருத்து வேறுபாடு, சண்டை, தவறாக புரிந்துகொள்ளுதல், ஈகோ, வெறுப்பு என படிப்படியாக அதிகமாகி கடைசியில் விவாகரத்து, நிரந்தரமான பிரிவு என்னும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

காதலிக்கும்போது உருகி உருகி காதலித்த துணையின் முகத்தை பார்க்ககூட பிடிக்காமல் போய்விடும். இதனால் இவர்கள் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினரும் பாதிக்கபடுவார்கள்.

விவாகரத்து தான் சரியான தீர்வு என்னும் அளவுக்கு காதல் கசிந்து விடாமல் பார்த்துகொள்வது காதல் திருமணம் புரிந்தவர்களின் தலையாய கடமை.

திருமணத்தின் முதல் நாளிலிருந்து வாழ்கையின் இறுதிநாள் வரை அன்பு, அக்கறை, பணிவு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல் போன்ற நற்குணங்களை பின்பற்றினாலே “காதல் திருமண வாழ்க்கை” சொர்க்கமாகும்.