Cinema Entertainment

6 நாட்களில் 15,000 ரசிகர்களை சந்திக்க உள்ள சூப்பர்ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்த், தனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சந்திப்புகள் நடைபெறவில்லை. ரசிகர்கள் தங்களை சந்தித்து பேசும்படி ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பி வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை சந்திக்க அவர் முடிவு செய்து உள்ளார்.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் ஆலோசனை கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் சத்திய நாராயணா, சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ரஜினிகாந்தின் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து எவ்வளவு ரசிகர்களை அழைத்து வரவேண்டும். எந்தெந்த தேதிகளில் வரவேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் வந்து இருந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் மண்டபத்துக்கு வெளியே திரண்டு நின்று ரஜினியை வாழ்த்தி கோஷம் போட்டபடி இருந்தனர். திடீரென்று அவர்கள் பாதுகாவலர்களை தள்ளிக்கொண்டு ‘கேட்டை’ திறந்து உள்ளே புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் மத்தியில் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா பேசியதாவது:-

“ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வந்தனர். இதனால் ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் முடிவு செய்து உள்ளார். வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் இந்த கூட்டம் நடக்கிறது. 32 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்க உள்ளார். புதுச்சேரி காரைக்கால் ரசிகர்களையும் சந்திக்கிறார்.

தினமும் 1500 ரசிகர்களை அவர் சந்திப்பார். 6 நாட்களும் 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரசிகர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அப்போது அனைத்து ரசிகர்களுடனும் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்வார். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவே இன்று ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே ரசிகர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்றைய கூட்டத்தில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை.”

இவ்வாறு சத்திய நாராயணா பேசினார்.

இதைதொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். காலை 10 மணிமுதல் பகல் 1 மணிவரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.