beauty tips HealthTips medicine

குளிர்கால கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

குளிர்காலத்தில் வழக்கத்தை விட தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக தலைதூக்கும். கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் மயிர் கால்கள் குளிர்ச்சி மிகுதியால் பாதிப்புக்குள்ளாக்கி வலுவிழக்க தொடங்கிவிடும். அதிலும் பெண்களுக்கு முடி கொட்டுவது அதிகரித்து கவலைக்குள்ளாக்கிவிடும். முடி உதிர்வை கட்டுப்படுத்தி கூந்தலை பளபளப்புடன் மிளிர வைக்க செய்ய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

* முடி உதிர்வுக்கான தீர்வுக்கு வெந்தயம் சிறந்த நிவாரணி. முதல் நாள் இரவு வெந்தயத்தை நீரில் நன்கு ஊறவைத்து விட்டு மறுநாள் காலையில் அதனை பசைபோல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் எலுமிச்சைப்பழ சாற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை தலையில் நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். தலை முடியின் மயிர்கால்கள் வரை வெந்தய பசை வேரூன்றுவதற்கு ஏதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கூந்தலை கழுவி வந்தால் கூந்தல் மென்மையாக மாறி அழகுற காட்சியளிக்கும்.

* குளிர்காலத்தில் பொடுகு பிரச்சினையும் பெரும்பாலான பெண்களை வாட்டி வதைக்கும். அதற்கும் வெந்தயம் கைகொடுக்கும். அதனை நீரில் நன்கு ஊறவைத்து மறுநாள் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் மயிர்கால்கள் வரை நன்கு வருடி அரைமணிநேரம் கழித்து குளித்து வர வேண்டும். நாளடைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும். தலையில் அரிப்பு போன்ற பிரச்சினையும் ஏற்படாது.

* பாதாம் எண்ணெய்யும் பொடுகு பிரச்சினையை போக்கும் சிறந்த நிவாரணி. அதனை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு முடியும் மிருதுவாக மாறும்.

* கூந்தல் எப்போதும் மிருது தன்மையுடன் மிளிர முட்டையையும் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். அதன் வெள்ளைக்கருவை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

* விளக்கெண்ணெயையும் வாரம் ஒருமுறையாவது தலைக்கு தேய்த்து வர வேண்டும். அதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. அவை பொலிவிழந்து காணப்படும் தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கும். வறண்டு காணப்படும் கூந்தலை சீர்படுத்த உதவும்.