Indians Tamil

கட்டண உயர்வு எதிரொலி: சென்னை சென்ட்ரலில் தினமும் 2 ஆயிரம் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை குறைந்தது

கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டதால் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. சென்னை சென்ட்ரலில் மட்டும் நாளொன்றுக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் குறைந்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.5 இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், பல ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணிசமான அளவு டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை தினமும் சுமார் 5 லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர். பயணிகள் தவிர, அவர்களை வழியனுப்ப வருபவர்கள், வெளியூரில் இருந்து வருபவர்களை அழைத்துச் செல்ல காத்திருப்பவர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நாளொன்றுக்கு 11 ஆயிரம் என்ற அளவில் விற்பனையாகி வந்தது. இது, இந்த மாதத்தில் 9 ஆயிரமாக குறைந்துள்ளது.

கட்டண உயர்வால் பலர் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமலேயே வந்து செல்கின்றனர். உரிய பயண டிக்கெட் இல்லாமலும், பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமலும் ரயில் நிலையங்களில் யாராவது சிக்கினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.