Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி எனப் பன்முகம் கொண்ட மானுட அறிஞர் ஆவார். விடுதலைப் போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ஆன்மீகவாதியாக வாழ்ந்த அரவிந்த கோஷின் வாழ்க்கை வரலாறு மற்றும் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 15, 1872

இடம்:  கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா

பணி: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர்

இறப்பு: டிசம்பர் 05, 1950

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட அரவிந்த கோஷ் அவர்கள், 1872  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15  ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும், ஸ்வர்ணலதாவிற்கும் மூன்றாவது குழந்தையாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஸ்ரீ அரவிந்தர், தன்னுடைய தொடக்க கல்வியை டார்ஜிலிங்கிலுள்ள “லோரெட்டோ கான்வென்ட்டில்” தொடர்ந்தார். பிறகு 1879 ஆம் ஆண்டு, சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்ற அவர், கல்வியை அங்கு தொடர்ந்தார். லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இளங்கலை கல்வியைத் தொடங்கி பட்டமும் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, புரட்சிகரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த் அவர்கள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார்.

சுதந்திரப்போராட்டத்தில் அரவிந்தரின் பங்கு

தன்னுடைய 21 வயது வரை, இங்கிலாந்தில் தங்கி, கல்வி பயின்ற ஸ்ரீ அரவிந்தர், 1893 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், பரோடா சமஸ்தானத்தில் அரசப் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய  பிறகு, வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் அவர்கள், விடுதலைப் போராட்டாத்தில் தன்னை ஈடுபத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்த பின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால், அரவிந்த் அவர்கள் ஆங்கில அரசால் 1907லிலும், 1908டிலும் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், “கர்மயோகி” என்ற ஆங்கிலப்பத்திரிக்கை மூலமும் “தர்மா” என்ற வங்காள மொழி பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு

சிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. 1909 சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழுகவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1910 ஆம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்கு சென்று, பிறகு புதுச்சேரியை வந்தடைந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று, ஒரு சீமானின் வீட்டில் தங்கவைத்தனர். இதையடுத்து, தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிறகு, அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும், யோகத்திலும் ஈடுபட்டார். அதுமட்டுமல்லால், தனது யோகத்தின் நோக்கத்தை விளக்கிடும் “சாவித்திரி” என்னும் மகா காவியத்தையும் ஸ்ரீ அரவிந்தர் படைத்தார்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக சிந்தனைகள்

‘உலகத்தைத் துறந்து, இறைவனை அடையவேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக் கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்பதோடு’ மட்டுமல்லாமல், தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை “ஆர்யா” என்ற ஆன்மீக இதழில், 1914 முதல் 1921 வரை எழுதினார். அவருடைய தத்துவங்கள், உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக அமைந்தது.

இறப்பு

‘இந்த மானுட வாழ்வு, தெய்வீக வாழ்வாக மலர வேண்டும்’ என உழைத்த ஸ்ரீ அரவிந்தர் அவர்கள், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஒரு சுதந்திர போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு மகா யோகியாகவும், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர். “பூரண யோகம்” என்ற உத்தியைப் பரப்பி, எல்லோரிடமும் ஆன்மிகம் மலரச்செய்த ஒரு மகான் ஆவார். இறைவனின் வழிகாட்டுதலில் படி, ஆன்மீக பாதையை தழுவி மாபெரும் சாதனை புரிந்து, உலகின் ஆன்மீக ஒளிவிளக்காய் திகழ்ந்த ஸ்ரீ அரவிந்தரின் பணி போற்றத்தக்க ஒன்றாகும்.

Exit mobile version