Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

Hariprasad chaurasia-ஹரிபிரசாத் சௌராசியா

ஹரிபிரசாத் சௌராசியா

ஹரிபிரசாத் சௌராசியா

ஹரிபிரசாத் சௌராசியா ஒரு புகழ்பெற்ற வட இந்திய பன்சூரி புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இந்துஸ்தானி இசையில் அவர் மேற்கொண்ட சாதனைகளுக்காக இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷன்’, மற்றும் ‘பத்ம விபூஷன்’ விருதுகளை வழங்கி கௌரவித்தது.

இதைத் தவிர, ‘சங்கீத நாடக அகாடமி விருது’, ‘கோனார்க் சம்மான்’, ‘புனே பண்டிட் விருது’ என மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க புல்லாங்குழல் மேதை ஹரிபிரசாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 01, 1938

இடம்: அலகாபாத், உத்திரபிரதேச மாநிலம், இந்தியா

பணி: இசையமைப்பாளர், புல்லாங்குழல் இசைக்கலைஞர்

நாட்டுரிமை: இந்தியன்

ஹரிபிரசாத் சௌராசியா பிறப்பு

‘பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா’ அவர்கள், 1938  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள “அலகாபாத்” என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு மல்யுத்த வீரர் ஆவார்.

ஹரிபிரசாத் சௌராசியா-ன் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தனக்கு நான்கு வயது இருக்கும் பொழுது, தன்னுடைய தாயை இழந்தார். பிறகு தன்னுடைய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். அவருடைய தந்தை மல்யுத்த கலைஞராக இருந்ததால், தன்னுடைய மகனையும் ஒரு மல்யுத்த வீரனாக வளர்க்க விரும்பினார்.

ஆனால், அவருக்கு இசையின் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததால், தன்னுடைய தந்தைக்குத் தெரியாமல் நண்பன் வீட்டில் இசைப் பயின்று வந்தார். பிறகு தன்னுடைய 15 வயதில் பண்டிட் ராஜாராம் அவர்களிடம் குரல் சம்மந்தமான வாய்ப்பாட்டு இசையைக் கற்கத் தொடங்கினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு, வாரனாசியிலுள்ள பண்டிட் போலாநாத் பிரசன்னா அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் புல்லாங்குழல் இசைக் கற்றார்.

ஹரிபிரசாத் சௌராசியா-ன் இசைப் பயணம்

1957 ஆம் ஆண்டு ஒடிஸா மாநிலம், கட்டாக்கிலுள்ள அகில இந்திய வானொலி நிறுவனமான ஆல் இந்திய ரேடியோவில் ஒரு இசைக் கலைஞராக பணியில் சேர்ந்தார்.

அந்த நேரத்தில் அன்னபூர்ணா தேவியின் (ஒரு பன்முக வாத்திய கலைஞர், பாபா அலாவுதீன் கான் மகள்) அறிமுகம் அவர்களுக்கு கிடைத்தது மட்டுமல்லாமல், இசைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய திறமையான புல்லாங்குழல் இசையை நுட்பமான முறையில் உலகிற்கு வெளிபடுத்திய அவர், மிக விரைவில் அனைவராலும் போற்றப்பட்டார்.

‘சாந்தினி’, ‘பாஸ்ளே’, ‘லம்ஹே’, ‘சில்சிலா’, ‘டர்’ போன்ற பல பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், நெதர்லாந்திலுள்ள “ரோட்டர்டாம் இசை கன்சர்வேட்டரியில்” உலக இசைத்துறைக் கலை இயக்குனராகப் பணியாற்றினார்.

மேலும் பல மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்ட அவர், ஜான் மெக்லாப்லின் ஜன் கர்பரேக், கென் லுபேர் போன்ற புகழ் பெற்ற கலைஞர்களுடனும் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

2006ல் மும்பையிலும் மற்றும் 2010ல் புவனேஸ்வரிலும் “விருந்தாவன் குருகுல்” என்னும் நிறுவனத்தினைத் தொடங்கினார்.

இந்நிறுவனத்தில் பாரம்பரிய இந்துஸ்தானிய இசையான பன்சூரி புல்லாங்குழல் இசையைப் பற்றி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுகளும் மரியாதைகளும்

பண்டிட் சௌராசியா அவர்கள், சர்வதேச அளவில் இந்திய பாரம்பரிய இசையைக் கொண்டு சென்று இந்திய கலைத் துறைக்குப் புகழையும், பெருமையையும் சேர்த்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஹரிபிரசாத் சௌராசியா-ன் காலவரிசை

1938 – ஜூலை 25 ஆம் நாள், இந்தியாவின் உத்திரபிரதேச பிரதேச மாநிலத்திலுள்ள “அலகாபாத்தில்” பிறந்தார்.

1984 – சங்கீத் நாடக அகாடமி விருது,

1992 – கோனார்க் சம்மான் மற்றும் பத்ம பூஷன் விருது.

2000 – பத்ம விபூஷன் விருது, ஹபீஸ் அலி கான் விருது மற்றும் டினானத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது.

2009 – வட ஒரிசா பல்கலைக்கழகம் மூலம் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.

cairocorps

Exit mobile version