Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கோவை சரளா

நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா அவர்கள். தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ வென்றுள்ள அவர், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் வளம் வருகிறார். அவரது ’என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற நகைச்சுவைக் காட்சிகளை எப்போது பார்த்தாலும் அனைவருக்கும் சிரிப்பு வரும். அத்தகைய திறமைமிக்க நகைச்சுவையாளினியாக விளங்கும் நடிகை கோவை சரளா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 7, 1962

பிறப்பிடம்: கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா

பணி: நகைச்சுவை நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கோவை சரளா அவர்கள், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. மேலும், தான் பிறந்த கொங்கு நாடான ‘கோவை’ என்ற சொல்லைத் தனது பெயரின் முன்னர் சேர்த்துக் கொண்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

தனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய திறமைகளைப் பற்றியறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள், அவரிடம் ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்னு சொல்லி, மேலும் படிப்பதற்காக உதவித் தொகை வழங்கினார். அந்த உதவித் தொகையின் உதவியில படிச்ச அவர், எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு, வளர்ந்த பின்னர், ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத்’ தானாகவே வளர்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து வளர்ந்த அவருக்கு, அவரைப் போலவே மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டுமென்று எண்ணம் தோன்றியது. அவர், தனது பள்ளிப்படிப்பை முடித்தப் பின்னர், திரையுலகில் கால்பதிக்க எண்ணினார், அவரது இந்த எண்ணத்திற்கு அவரது தந்தையும், அக்காவும் துணை நின்றதால், அவர் திரையுலகில் நுழைந்தார்.

திரையுலக வாழ்க்கை

திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த சேர்ந்த அவர், வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போது, பாக்யராஜை சந்திக்க நேர்ந்ததால், அவரை சந்தித்துத் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவரது பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ் அவர்கள், அவர் திரைக்கதை எழுதி, நடித்த படமான 1983ல் வெளியான ‘முந்தானை முடிச்சு’ என்ற திரைப்படத்தில் அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அப்படமே, தமிழ்த் திரையுலகில் கோவை சரளாவின் முதல் படமாகும். அப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்குப் பெருமளவு வரவேற்பு கிடைத்ததால், அடுத்த ஆண்டே ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984)போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘சின்ன வீடு’ (1985), ‘லக்ஷ்மி வந்தாச்சு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1985), ‘வசந்த ராகம்’ (1986), ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), ‘தங்கமான புருஷன்’ (1989), ‘பாண்டிநாட்டுத் தங்கம்’ (1989), ‘சோலைக் குயில்’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘மை டியர் மார்த்தாண்டன்’ (1990), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1990), ‘சின்னவர்’ (1992), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘எங்களுக்கும் காலம் வரும்’ (1992), ‘மகளிர்க்காக’ (1994), ‘காதலா காதலா’ (1998), ‘பாட்டாளி’ (1999), ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ (1999), ‘பட்ஜெட் பத்மநாபன்’ (2000), ‘கந்தா கடம்பா கதிர்வேலா’ (2000), ‘ஷாஜஹான்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ (2001), ‘என்னமா கண்ணு’ (2002), ‘கோவை பிரதர்ஸ்’ (2006), ‘உளியின் ஓசை’ (2007), எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும்’ காஞ்சனா’ (2011) திரைப்படம் மூலம் தனது இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கிய அவர், ‘வானவராயன் வல்லவராயன்’ (2013), ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ (2012), ‘பாகன்’ (2012), ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ (2012), ‘தில்லு முல்லு’ (2013), ‘ரகளைப்புரம்’ (2013)போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்ப் படங்களைத் தவிர, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

பிரபலமான அவரின் சில டையலாக்குகள்

தொலைக்காட்சி வாழ்க்கை

1983ல் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய கோவை சரளா அவர்களுக்கு, 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர், திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், தொலைக்காட்சியின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். அவர், சன் டிவியில் ‘சுந்தரி சௌந்தரி’, கலைஞர் டிவியில் ‘வந்தனா தந்தனா’ மற்றும் ஜெயா டிவியில் ‘சபாஷ் மீரா’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். பின்னர், சன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்தார். இப்போது, கலைஞர் டிவியில் ‘பாசப் பறவைகள்’ என்ற குடும்ப விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கோவை சரளா அவர்கள், இன்றுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.

விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001) மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ (2003) என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதுகளையும்’ வென்றுள்ளார்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா அவர்கள், தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது.

Exit mobile version