Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பி. பி. ஸ்ரீனிவாஸ்

பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். தன்னுடைய வசீகரப் பாடல் வரிகளில் இனிமையைக் கூட்டி, ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் என 12 மொழிகளில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் தன்னுடைய இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்றப் பாடல்களைப் பாடி, தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அற்புதக் கலைஞர் ஆவார். தமிழில் அவர் பாடிய ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ போன்ற பாடல்கள் மறக்க முடியாதவையாகும். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வந்த பி.பி. ஸ்ரீனிவாஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 22, 1930

இடம்: காக்கிநாட, ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்படப் பின்னணி பாடகர்   

இறப்பு: ஏப்ரல் 14, 2013

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 1930  ஆம் ஆண்டு செப்டம்பர் 10  ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள “காக்கிநாடா” என்ற இடத்தில் பனிந்திர சுவாமி என்பவருக்கு, கிரியாம்மாவிற்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பதில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய தாய் ஒரு இசை ஆர்வலராக இருந்தமையால், அதன் தாக்கம் அப்படியே இவரையும் இசையில் ஈடுபடவைத்தது. ஆனால் இவருடைய பெற்றோர்கள் இவரை ஒரு அரசு பணியாளராக்க விரும்பி, இவரை பி. காம் படிக்க வைத்தனர். பின்னர் இளங்கலையில் பட்டம் பெற்ற அவரை ஒரு வழக்கறிஞராக்க வேண்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், இசையில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடும் அவரை இசைத் துறைக்கே கொண்டுவந்து சேர்த்தது.

திரைப்படப் பின்னணிப் பாடகராக அவரின் பயணம்

சட்டக்கல்விப் பயில்வதை விடுத்து, இசைத்துறையினைத் தேர்வுசெய்த அவர், முறையாக சங்கீதம் பயின்று 1951 ஆம் ஆண்டு சினிமா துறையில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். ஜெமினி தயாரித்து 1951 ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் பாரத்” என்ற இந்தித் திரைப்படத்தில் “கனஹிபரது” என்ற பாடலை முதன் முதலில் பாடினார். பிறகு, தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில் “சிந்தனை செய் செல்வமே” என்ற பாடலின் மூலம் அறிமுகமான அவர், பாசமலரில் “யார் யார் யார் இவர் யாரோ”, பாவ மன்னிப்பில் “காலங்களில் அவள் வசந்தம்”, எதிர்நீச்சலில் “தாமரைக் கன்னங்கள், தேன்மலர் கிண்ணங்கள்”, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் “காத்திருந்த கண்களே”, அடுத்த வீட்டுப் பெண்ணில் “கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே” மேலும் “மயக்கமா?கலக்கமா? மனதிலே குழப்பமா?”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “ரோஜா மலரே ராஜ குமாரி”, போன்ற மனதை உருக்கும் பாடல்களைப் பாடி, அழியா புகழ்பெற்றார். சுசிலா, ஜானகி, பானுமதி, எல். ஆர். ஈஸ்வரி, லதா மங்கேஷ்கர் போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ள அவர், தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, நாகேஷ் போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார். கர்நாடக இசை மட்டுமல்லாமல், இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகருக்கு நிகராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் பாடி, சிறந்த பின்னணிப் பாடகராக முத்திரைப் பதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “கஸல்” பாடல்களை அழகாகப் பாடுவதில் பெயர்பெற்று விளங்கினார்.

காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்:

‘காலங்களில் அவள் வசந்தம்’ (பாவமன்னிப்பு), ‘காத்திருந்த கண்களே’ (மோட்டார் சுந்தரம் பிள்ளை), ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ (ராமு), ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ (வீரபாண்டிய கட்டபொம்மன்), ‘கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே’ (அடுத்த வீட்டுப் பெண்), ‘என்னருகே நீ இருந்தால்’ (திருடாதே), ‘விஸ்வனாதன் வேலை வேண்டும்’, ‘உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா’, மற்றும் ‘அனுபவம் புதுமை’ (காதலிக்க நேரமில்லை), ‘கண்ணிரண்டு மெல்ல மெல்ல’ (ஆனவன் கட்டளை), ‘மயக்கமா கலக்கமா’ (சுமைதாங்கி), ‘நேற்றுவரை நீ யாரோ’ (வாழ்க்கை படகு), ‘பார்த்தேன் சிரித்தேன்’ (வீர அபிமன்யூ), ‘நெஞ்சம் மறப்பதில்லை’ (நெஞ்சம் மறப்பதில்லை), ‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ (பாசம்), ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ (நெஞ்சில் ஒரு ஆலயம்), ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ (போலீஸ்காரன் மகள்), ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ (வீரத்திருமகன்), ‘பொன் ஒன்று கண்டேன்’ (படித்தால் மட்டும் போதுமா), ‘ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்’ (ஊட்டி வரை உறவு), ‘வளர்ந்த கலை மறந்துவிட்டால்’ (காத்திருந்த கண்கள்), ‘அவள் பறந்து போனாலே’ (பார் மகளே பார்), ‘தாமரைக் கன்னங்கள்’ தேன்மலர் கிண்ணங்கள் (எதிர்நீச்சல்), ‘ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்’ (சாரதா) போன்ற பாடல்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்க இடம்பிடித்துள்ளன.

விருதுககளும் மரியாதைகளும்

இறப்பு

தன்னுடைய வித்தியாசமான குரலால் இசை ரசிகர்களை தன்வசப்படுத்திய பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தன்னுடைய 82 வது வயதில் சென்னையில் காலமானார். அவருடைய உயிர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

 

Exit mobile version