Life History தலைவர்கள்

ஆர். வெங்கட்ராமன்

சுதந்திர இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவரும், உண்மையான தேசபக்தரும், வழக்கரிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி விரிவாக காண்போம்.

பிறப்பு:டிசம்பர் 4, 1910

இடம்:தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

இறப்பு:ஜனவரி 27, 2009

பணி: வழக்கறிஞசர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி,

நாட்டுரிமை:இந்தியா

 

பிறப்பு

ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1910 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.  இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.

ஆரம்ப வாழ்க்கை

ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தனது பள்ளிப்படிப்பை பட்டுகோட்டையில் தொடங்கினார். பின்னர், மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவர் “லயோலா கல்லூரியில்” பொருளாதாரத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்ட கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்த அவர், 1935 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், அக்கட்சியில் சேர்ந்து தன்னுடைய தேசபக்தியை வெளிபடுத்தி 1942 ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார்.  இதன் விளைவாக, அவர் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும் பெற்றார். விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிர பங்காற்றினார். 1949-ல் “லேபர் லா ஜர்னல்” என்னும் இதழைத் தொடங்கினார்.

பணிகள்

தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபட்டார். 1947-ல் சென்னை மாகாணா பார் கூட்டமைப்பின் செயலாளராகவும், 1951-ல் உச்சநீதிமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1950 முதல் 1957 வரை பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிய இவர், 1957 ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற மக்களவை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்ற உறுப்பினரானார். ஆனால், தமிழகத்திற்கு இவருடைய சேவை மீண்டும் தேவை என்பதை உணர்ந்த அப்போதைய தமிழக முதலமைச்சர், காமராஜரால் தமிழ் நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டார். தொழிலாளர் நலத்துறை, மின்சாரத்துறை, தொழில்துறை, போக்குவரத்துதுறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்து வந்தார். 1953 லிருந்து 1954 வரை காங்கிரஸ் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற கூட்டத்திற்கு இவர் பிரதிநிதியாக சென்றார். 1967 ஆம் ஆண்டு மத்திய மந்திரி சபை அமைச்சராக பணியாற்றிய அவர் தொழில்துறை, தொழில்கள், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, யூனியன் திட்ட கமிஷன் உறுப்பினராகவும், ரயில்வே துறை அமைச்சராகவும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.

1975 முதல் 1977 வரை “சுயராஜ்ய” பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றிய ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், அரசியல் விவகாரக் குழுவிலும், பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிலும் உறுப்பினராக பணியாற்றினார். 1977-ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் அரசு தோல்வியைத் தழுவினாலும், தெற்கு சென்னை லோக்சபா தொகுதியில் இவர் வெற்றிபெற்று பாராளுமன்ற எதிர்கட்சி உறுப்பினராக (பொது கணக்கு குழிவின் தலைவர்) பதவிவகித்தார். மீண்டும் 1980-ல் இடைதேர்தல் ஏற்பட்டு இந்திராகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்த போது, இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவியேற்றார். 1983 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பாணிகளை கொண்டுவந்தது மட்டுமல்லாமல், விண்வெளி ஆராய்ச்சி துறையில் பணியாற்றி கொண்டிருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை ஏவுகணை துறைக்கு மாற்றி, இந்திய ராணுவ வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1984 ஆம் ஆண்டு இந்திய துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பின்னர் 1987-ல் ஜனாதிபதியாகவும் தேர்தெடுக்கப்பட்டர். இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மூன்றுக்கு மேற்பட்ட பிரதமர்கள் குறுகிய காலத்தில் பதவிக்கு வரும் நிலைமையும், அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் நடுநிலைமை தவராமல் தனது பணியை சிறப்பாக செய்தார்.

ஐக்கிய நாடுகள்

ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1950 முதல் 1960 வரையிலான காலத்தில் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேச புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார். 1958-ல் ஜெனிவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் நல மாநாட்டில், இந்திய தூதுகுழு தலைவராகவும் கலந்துகொண்ட அவர், 1978-ல் வியட்நாவில் நடந்த மாநாட்டிலும் பங்குபெற்றார். ஐக்கிய நாடுகள் சபையில் கீழ் உள்ள “யுனைடெட் நேஷன் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிபுனல்” அமைப்பின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட  பின்னர், 1968-ல் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

சென்னை பல்கலைக்கழகம், பர்துவான் பல்கலைக்கழகம், நாகர்ஜுனா பல்கலைக்கழகம் மற்றும் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு ‘கெளரவ டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. சென்னை மருத்துவக்கல்லூரியில் மதிப்புமிக்க ஆய்வாளராக இருந்தார். ரூர்க்கி பல்கலைக்கழகம், இவருக்கு ‘சமூக அறிவியல் மருத்துவ பட்டத்தினை’ வழங்கி கெளரவித்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் இவருடைய பங்களிப்பை நினைவுகூறும் வகையில் மத்திய அரசால் இவருக்கு “தாமரைப் பட்டயாம்” வழங்கப்பட்டது. அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜருடன் ஆர்.வெங்கட்ராமனும், சோவியத் யூனியனுக்கு சென்றனர். அப்பயணத்தில் அவருடன் ஏற்பட்ட பயண அனுபவங்களை “சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.  இந்நூலுக்கு ரஷ்யாவின் “சோவியத் லேண்ட்” என்ற விருது வழங்கப்பட்டது. காஞ்சி மடத்தின் கெளரவ ஆலோசகராக இருந்த இவருக்கு, அந்த மடத்தின் மகாசுவாமிகள் “சத் சேவா ரத்னா” என்ற விருதை வழங்கி ஆசிர்வதித்தார்.

இறப்பு

சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் நாள் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், தனது 98 வது வயதில் காலமானார்.  சிறந்த தொழிற்சங்க தலைவராகவும், பணிநிர்வாகியாகவும் வாழ்ந்து காட்டிய ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தேசத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக என்றென்றும் நினைக்கப்படுகிறார்.

காலவரிசை

1910 – தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.

1942 – ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ பங்குகொண்டு இரண்டாண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.

1947 – சென்னை மாகாண பார் கூட்டமைப்பின் செயலாளராக பணியாற்றினார்.

1949 – “லேபர் லா ஜர்னல்” என்னும் இதழைத் தொடங்கினார்.

1951 – உச்சநீதி மன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

1953 – காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.

1955 – ஐக்கிய நாடுகள் சபையில் கீழ் உள்ள “யுனைடெட் நேஷன் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிபுனல்” அமைப்பின் தலைவராக பணியாற்றினார்

1977 – மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

1980 – மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.

1983 – இந்திய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

1984 – இந்திய துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.

1987 – இந்திய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.

2009 – ஜனவரி மாதம் 27 ஆம் நாள், தனது 98 வது வயதில் காலமானார்.