Life History தலைவர்கள்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தில் பிறந்த சோனியா காந்தியின் மகன் ஆவார்.

இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  செல்வாக்கு மிக்கக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூன் 19, 1970

பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா

பணி: அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ராகுல் காந்தி அவர்கள், 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் புது தில்லியில், இந்தியாவின் முன்னால் பிரதமராக மந்திரியான ராஜீவ்காந்திக்கும், தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார். இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேரனும், இந்திராகாந்தியின் பேரனும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை, நியூ தில்லி மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கிய அவருக்கு, இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் ஃபிளோரிடா மாநிலத்தில் உள்ள ரோல்லின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்ந்த அவர், பி.ஏ இளங்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார். பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர், ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, எம்.ஃபில் பட்டம் பெற்றார்.

ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பணிகள்

வெற்றிகரமாகத் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து, லண்டனில் உள்ள மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும் கண்காணிப்புக் குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்த அவர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியா திரும்பினார். 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், மும்பையில் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனத்தை நடத்திவந்தார்.

அரசியல் வாழ்க்கை

2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவ்வப்போது தனது தாயாருடன் பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வந்த ராஜீவ்காந்தி அவர்கள், அரசியலில் தன்னுடைய வருகையை மார்ச் 2004 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான அமேதியில் (உத்திரப்பிரதேச மாநிலம்) போட்டியிடுவதாக அறிவித்தார். ராகுல்காந்தி, தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரானார்.

அவ்வப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், ஊடகங்களும் இவரை வருங்கால காங்கிரஸ் கட்சித் தலைவர் என சித்தரித்தாலும், எதைப்பற்றியும் கவலைப் படாமல், தனது தொகுதி பிரச்சனைகளிலும், உத்திரப்பிரதேச அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இருந்தாலும், தேர்தல் காலக்கட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல், ‘இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும்’, ‘இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கும்’ செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2008 ஆம் ஆண்டு ஒரு நேர்காணல் தேர்வை நடத்தி, இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும், ஆலோசகர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 3,30,000 –க்கும் மேற்பட்டட வாக்குகளைப் பெற்று, மீண்டும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

ராகுல்காந்தியின் தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள்

அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, விரைவில் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவருகிறார்.

குறிப்பாக சொல்லப்போனால், தந்தை ராஜீவ்காந்தி இறப்பிற்குப் பிறகு, அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவரால்தான் நிரப்ப முடியும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் நம்பும் அளவிற்கு செல்வாக்குப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை