Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு

தமிழக அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்வேன் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்து உள்ளார்.
கோவை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஹரிகரன் மற்றும் அரசு அதிகாரிகளை அழைத்து கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீரென்று அரசு அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியதற்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதற்கும், மாநில அரசின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிடுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதை பாரதீய ஜனதா கட்சி வரவேற்று உள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியது ஆரோக்கியமானதுதான் என்றும், இதன்மூலம் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்துக்கு அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது என்றும், கவர்னரின் செயல் மாநில உரிமையை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் கூறினார்.
ஆலோசனை நடத்தியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருப்பதால், இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.

இந்த நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று 2-வது நாளாக கோவையில் ஆய்வு மேற்கொண்டார். காலை 7 மணி அளவில், காந்திபுரம் பஸ் நிலையத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு முறையில் செயல்படும் நவீன கழிப்பிடத்தை அவர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் பஸ் நிலையத்துக்குள் சென்று தூய்மைபணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கையுறை அணிந்து துடைப்பத்துடன் பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை அள்ளி தொட்டியில் போட்டார். கவர்னருடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளும் கையுறை அணிந்து குப்பைகளை அகற்றினார்கள்.

அதன்பிறகு கவர்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை சவுரிபாளையம் சென்றார். அங்கு அரிமா சன்னிசைடு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சியிடம் வழங்கி வருகிறார்கள். அந்த பணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கு பெற்றுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
அதை கேட்டறிந்த கவர்னர், ‘உங்கள் எல்லோருக்கும் வணக்கம்’ என்று தமிழில் கூறிவிட்டு தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

இங்கு பேசியவர்கள் சிலர் தமிழில் பேசினார்கள். என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. நான் கவர்னர் மாளிகையில் தமிழ் கற்றுக்கொள்ள தொடங்கி உள்ளேன். நான் அடுத்த ஆண்டு மீண்டும் கோவைக்கு வருவேன். அப்போது நான் தமிழில் பேசுவேன். நீங்கள் தமிழில் பேசுவதையும் புரிந்து கொள்வேன்.

நான் அசாம் மற்றும் மேகலாயா மாநிலங்களில் கவர்னராக இருந்து உள்ளேன். தூய்மையில் மராட்டிய மாநிலம்தான் முதல் இடத்தில் இருக்கும் என்று நான் நினைத்து இருந்தேன். ஆனால் தமிழகத்துக்கு வந்த பின்னர் தான் தூய்மையை பராமரிப்பதில் மராட்டியத்தை விட தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து நான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இனி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வேன். இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஹரிகரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்த கவர்னர், பின்னர் திருப்பூர் சென்றார்.

Exit mobile version