வங்கி மோசடி வழக்கில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா உள்ள இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் அண்ணாமலை (வயது 49). அண்ணாமலை, சுவாமி ஸ்ரீ செல்வம் சித்தர் என்று அங்கு அனைவராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். கோவிலில் ஆசிர் வழங்கவும், பூஜை தொடர்பாகவும் வரும் பக்தர்களிடம் பணம் வசூல் செய்து உள்ளார். கோவில் சாமியாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பக்தர்கள், தேவையான பணத்தை வழங்க தங்களது கிரிடிட் கார்ட்டு நம்பரையும் கொடுத்து உள்ளனர். சாமியார் அதனை பலமுறை உபயோகித்து உள்ளார். பக்தர்கள் தங்களது கிரிடிட் கார்ட்டுக்கு பணம் கட்டியபோது சந்தேகித்தனர். சாமியார் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாமியார் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவில் மூலமாகவும், கிரிடிட் கார்ட்டு மூலமாகவும் கிடைத்த பணம் அனைத்தையும் சாமியார் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தி உள்ளார். ஆடம்பரமான வீடுகள், நிலங்கள் மற்றும் ஆடம்பரமான வாகனங்களை வாங்கி குவித்து உள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள வங்கியிலும் பணம் போட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வங்கி மோசடி மற்றும் வரி மோசடி செய்த சாமியாருக்கு கோர்ட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.
வங்கி மற்று வரி மோசடி தொடர்பாக இரண்டு வாரமாக தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி சாமியார் அண்ணாமலையை குற்றவாளி என்று அறிவித்தார். சாமியார் கோவில் தரப்பில் தொடரப்பட்ட திவாலா வழக்கிலும் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.