சென்னை, மார்ச் 25–
செல்போன்கள் மீது தமிழக அரசு 14.5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரியை விதித்துள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தடவை செல்போன் வாங்கும்போது, சில நூறு ரூபாயை மதிப்புக்கூட்டு வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இது செல்போன்களின் மொத்த விலையை அதிகரிக்க செய்து விடுகிறது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏழை–எளிய மக்களும் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக நவீன வசதிகள் கொண்ட செல்போன்கள் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் மதிப்புக்கூட்டு வரி விதிப்பால் ஏழைகள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே ஏழை–எளியவர்களும் நவீன செல்போன்களை வாங்கி பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் செல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளது.
அதாவது தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 9.5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் செல்போன்கள் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களின் விலை சுமார் ரூ.1000 வரை குறையும் என்று தெரிய வந்துள்ளது.
செல்போன் விலை குறையும் என்ற தகவலால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல செல்போன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் செல்போன் விற்பனையில் முதன்மை இடத்தில் இருக்கும் பிரியதர்ஷினி நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஜி.சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘செல்போன் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் நிறைய பேர் பலன் அடைவார்கள். தரம் உயர்ந்த செல்போன்களை எல்லாரும் வாங்கும் நிலை உருவாகும். இதனால் செல்போன்களின் மொத்த விற்பனையும் உயரும்’’ என்றார்.