தற்போதைய செய்தி

மேலும் 20 ரூபாய் உயர்த்த முடிவு: சென்னையில் தான் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம்

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2 வழித்தடத்தில் நிறைவேற்றப்படுகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

தற்போது கோயம்பேடு- பரங்கிமலை, சின்னமலை- விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

இந்த மாத இறுதியில் திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் ரெயில் நிலையங்கள் பயணிகளுக்கான வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக இயக்கப்படும். அதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன.

மெட்ரோ ரெயில் முழுமையாக செயல்படும் பட்சத்தில் அதன்கட்டணம் வேறுவிதமாக மாற்றி அமைக்கப்படும். தற்போது ரூ.10 முதல் ரூ.50 வரை சாதாரண வகுப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சிறப்பு வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய இந்த கட்டணம் இரு மடங்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டிலேயே அதிக பட்சமாக ரூ.60 கட்டணம் டெல்லி மெட்ரோ ரெயில் வசூலிக்கிறது. வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், விமான நிலையம் வரை செல்ல ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது விதிக்கப்படும் கட்டணத்தை விட அனைத்து பகுதியும் உள்ளடக்கி மேலும் ரூ.20 கூடுதலாக நிர்ணயம் (ரூ.70) செய்து வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம் என்ற நிலை ஏற்படும். சாதாரண கட்டணத்திற்கு ரூ.70 ஆக உயரும் பட்சத்தில் ‘ஸ்பெ‌ஷல்’ வகுப்பு பயணத்திற்கு ரூ.140 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும் போது, “மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் போது பயண நேரம் வெகுவாக குறைகிறது. 24 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை தூரத்தை கணக்கிட்டு நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உள்ள 45 கிலோ மீட்டர் தூரம் பயணம் செயல்பாட்டிற்கு வரும் போது ஒருவர் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். அதுவே சிறப்பு வகுப்பாக இருந்தால் ரூ.140 கொடுக்க வேண்டும்” என்றனர்.