Flash News Tamil

நடிப்பை பற்றிய படிப்பு- புதிய கல்வி திட்டம்…..

நடிப்பில் ஆர்வம் உள்வர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முறையான பயிற்சியை அளிக்கும் நோக்கத்தில் கூத்துப் பட்டறை திட்டத்தை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களில் ஏற்கெனவே நடித்துவரும் அனுபவமிக்க கலைஞர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் “தினமணி’க்கு அளித்த பேட்டி:

திறன்மிக்க பல்வேறு சிறந்த கலைஞர்களை திரையுலகுக்கு உருவாக்கித் தந்த கூத்துப்பட்டறைகள் இன்றைக்கு போதிய வரவேற்பு இன்றி அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

அதே நேரம், நடிப்புத் துறைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று நடிப்புத் துறை மீது ஆர்வம் கொண்டு வரும் இளைஞர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் நாடகப் பயிற்சி, நடிப்புப் பயிற்சியை அளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது 15 நாள் குறுகியகால பயிற்சித் திட்டமாகும். ஒரு பிரிவுக்கு 30 பேர் வீதம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் 3 மாத பயிற்சிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பல்கலைக்கழகம் குறுகியகாலப் பயிற்சிக் கட்டணத்தை ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யலாம் என முடிவு செய்துள்ளது. இதற்கு கல்வித் தகுதியோ, வயது வரம்பு எதுவும் கிடையாது என்றார்