Flash Indians News Sports

‘ஸ்லெட்ஜிங்’ செய்வது ஒருநாள் கைச்சண்டையில் போய் முடியும்: ஹோல்டிங் எச்சரிக்கை

எதிரணி வீரர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடும் ‘ஸ்லெட்ஜிங்’ போக்கினால் என்றாவது ஒருநாள் மைதானத்திலேயே கைகலப்பு நடக்கப் போகிறது என்று மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் எச்சரித்துள்ளார்.

“நான் விளையாடும் காலக்கட்டங்களில் ஸ்லெட்ஜிங் கிடையாது. ஒரு சில வீரர்கள் சிலர் பற்றி ஓரிரு வார்த்தைகளை நகைச்சுவையாகக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நான் பார்ப்பதெல்லாம் என்னவெனில் பெவிலியனுக்குச் செல்லும் போது ஒருவர் முகத்துக்கு நேராக ஒருவர் சில வசைகளை பொழிவதையே.

இம்மாதிரி என்னிடம் யாரேனும் நடந்து கொண்டிருந்தால்… நான் வேகமாக வீசும், ரத்தம் எளிதில் சூடாகும் ஒரு வேகப்பந்து வீச்சாளன், எனவே அப்படி நடந்திருந்தால் அது மைதானத்துடன் முடிந்து விடக்கூடிய ஒரு நிகழ்வாக மட்டுமே இருந்திருக்காது.

வசைபாடுவது பிறகு மைதானத்துக்கு வெளியே அனைத்தும் நலமாக உள்ளது என்று சப்பைக் கட்டுவது, என்னைப் பற்றி தனிமனித அவதூறு செய்து விட்டு மைதானத்துக்கு வெளியே அனைத்தும் சரி, மைதானத்தோடு முடிந்து விட்டது நாம் நண்பர்கள்… இதெல்லாம் ஒருக்காலும் ஏற்க முடியாது, இல்லவே இல்லை. ஏற்கப்படமுடியாதது.

இதே நிலை நீடித்தால் ஒருநாள் இல்லை ஒருநாள் மைதானத்தில் நிச்சயம் சண்டை நடக்கும். வீரர்களின் தனிப்பட்ட உணர்ச்சிகள் மீது வசையை பிரயோகிப்பது நிற்க வேண்டும், இல்லையெனில் மைதானத்தில் ஏதோவொன்று நிகழும் அபாயம் உள்ளது, அப்போதுதான் தெரியப்போகிறது நாம் கொஞ்சம் அதிகமாக எல்லையைக் கடந்து விட்டோம் என்பது” என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய தொடரில் டேவிட் வார்னர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே நடைபெறும் வாக்குவாதங்கள் மற்றும் ஆண்டர்சன், ஜடேஜா, சைமன்ஸ்-ஹர்பஜன் விவகாரம் ஆகியவை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஹோல்டிங் இவ்வாறு பதில் அளித்தார்.

1995-ம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் வாஹ், இப்படித்தான் ஆம்புரோஸ் மீது தனிநபர் வசையைப் பிரயோகிக்க கொதிப்படைந்த அவர் அன்று ஸ்டீவ் வாஹை அடித்து வீழ்த்தியிருப்பேன் என்று தனது சுயசரிதையில் சமீபத்தில் கூறியுள்ளதும் இதனுடன் தொடர்பு படுத்தி நோக்கத்தக்கது.