political

சசிகலா வழக்கறிஞர் வீட்டில் ஒரு அறை, லாக்கருக்கு சீல்

நாமக்கல் மோகனூர் சாலை பகுதியில் உள்ள வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை நடத்த வந்த சேலம் வருமான வரித்துறை அதிகாரி.

சசிகலாவின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் கடந்த 3 தினங்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் சாலை கூட்டுறவு காலனியில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உள்ளது. கடந்த 10-ம் தேதி காலை செந்தில் வீட்டுக்கு கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர்.

செந்திலின் உறவினரான மோகனூர் சாலை பி.வி.ஆர். வீதியில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி வீடு, செந்திலின் தொழில் பங்குதாரர் என கூறப்படும் எம்.ஜி.நகரைச் சேர்ந்த சுப்ரமணியம், செந்திலின் உதவியாளரான வழக்கறிஞர் பாண்டியன், முல்லை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 3-வது நாளான நேற்றும் மேற்குறிப்பிட்ட 5 பேர் வீடுகளிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

செந்தில் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையை திறக்க முடியாததால், அந்த அறை மற்றும் வீட்டில் இருந்த லாக்கர் ஒன்றுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டதாக வருமான வரி்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. செந்திலின் தங்கை லாவண்யா, சமீபத்தில் மோகனூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வாடகைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

About the author

Aspin Maju