political

வாங்க ஓபிஎஸ், உட்கார்ந்து பேசுவோம்! அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் கலகல பேட்டி

இருஅணியினரும் உட்கார்ந்து பேச வேண்டும் என்றும் பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், தங்க தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் பழனிசாமி அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் இணைய வேண்டும் என்று தற்போது அ.தி.மு.க.வில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனிடையே, டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக பழனிசாமி அணியினர் அறிவித்ததோடு, பன்னீர்செல்வம் அணிக்கு அழைப்புவிடுத்தனர். இந்த அழைப்பை வரவேற்ற பன்னீர்செல்வம், தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டது, நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பன்னீர்செல்வத்தை வசைபாடினார். “பன்னீர்செல்வம் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை. அமெரிக்காவில் ட்ரம்ப்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்று கூட பன்னீர்செல்வம் கூறுவார்” என்று கலாய்த்தார் ஜெயக்குமார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேட்டி பன்னீர்செல்வம் அணியினரை கொந்தளிக்க வைத்தது. “தினகரனை வெளியேற்றி நாடகம் நடத்துகின்றனர். சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெற வேண்டும்.  கட்சியில் இருந்து இருவரையும் வெளியேற்றுவதை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தனர்.

இரண்டு தரப்பு அணியினரும் மாறிமாறி பேட்டிக்கொடுத்து வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு தரப்பினருக்கும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், “பன்னீர்செல்வம் தரப்பினர் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுயலாபத்துக்காக யாரும் யோசிக்கக் கூடாது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டால் பரிந்துரை செய்வோம். எங்களுக்கு ஏற்படாத அவமானமா. எல்லோருக்கும் வேதனை இருக்கிறது. ஜெயக்குமார் கூறிய வார்த்தைகளுக்கு அவர்தான் பதில்கூற வேண்டும். இரு அணியினரும் குழு அமைத்து பேச வேண்டும்.

செய்தியாளர்களிடம் இன்று தம்பிதுரை பேசும்போது குழு அமைத்து உட்கார்ந்து பேசுவாங்க. ஆளுநரை நட்பு நிமித்தமாக சந்தித்து வந்தேன். குழு உட்கார்ந்து பேசி தேவைப்பட்டால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சொன்னார். நீதி விசாரணை வைக்கலாம். தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் அணியினர் உட்கார்ந்து பேசும் போது நீதி விசாரணை பற்றி பேசலாம். தயவு செய்து நிபந்தனை விதிக்க வேண்டாம். கட்சிக்காக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தினகரனை விலக்கியதற்கு  உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறி வருவது ஏற்புடையதல்ல. திரும்பத்திரும்ப குற்றச்சாட்டுகளை கூறி வருவது ஏற்புடையதல்ல. தினகரனே விலகியதாக கூறிவிட்டபிறகும் வேறென்ன எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

இதனிடையே, சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.