political

பெண்கள் மீது தடியடி: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமை ஆணையம்

சென்னை:

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. அதற்குப் பதிலாக சாமளாபுரம் அய்யன் கோவில் செல்லும் வழியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை நேற்று தொடங்கியது.

இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து போராடினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அப்போது ஈஸ்வரி என்ற 45 வயது பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். அடி தாங்க முடியாத அந்த பெண் நிலைகுலைந்தார்.

இந்த காட்சி டி.வி. சேனல்களிலும், புகைப்படமாக பத்திரிகைகளிலும் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இதேபோல போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் சிவகணேஷ் மண்டை உடைந்தது. பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் கன்னத்தில் அறைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் மீது போலீசார் நடத்திய தடியடி குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோ தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.