Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அமைச்சரவையில் மாற்றம் வராது: டி.டி.வி தினகரன் பேட்டி

சென்னை:

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என தகவல் பரவியது.

இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டிற்கு அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அவர்களிடம் தினகரன் ஆலோசனை நடத்தியபோது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து எழுந்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன், அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரமும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

இந்த சந்திப்புக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தி இருக்கிறீர்களே? முக்கிய செய்திகள் ஏதும் உண்டா?

பதில்:- அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு நான் அடையாறில் உள்ள என் வீட்டுக்கு வந்தேன். என்னுடன் சில அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் அங்கேயே நாங்கள் சில வி‌ஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அதில் ஒவ்வொருவரும் சில கருத்துக்களை தெரிவித்தனர். சிலரது குரல் ஓங்கி ஒலிக்கும். சிலர் சாதாரணமாக பேசுவார்கள். நாங்கள் ஜாலியாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம்.

கே:- டி.டி.வி. தினகரனை பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என 10 அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?

ப:- நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுமாதிரி தகவல் எதுவும் இல்லை. வதந்தியாக இருக்கலாம். நீங்கள் எந்த அமைச்சர்களை சொல்கிறீர்கள். எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள்.

கே:- வருமான வரித்துறை விசாரணை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்னும் தொடர்கிறதே?

ப:- அது ஒன்றும் இல்லை. அவர் மீது எந்த தவறும் இல்லை. அவர் நேற்று என்னை பார்த்து பேசிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

கே:- அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கப்படுவாரா?

ப:- அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட மாட்டார். விஜயபாஸ்கர் பதவி விலக தேவை இல்லை.அமைச்சரவையிலும் மாற்றம் வராது.

கே:- திடீரென அமைச்சர்கள் உங்களை சந்திக்க காரணம் என்ன?

ப:- இது எதார்த்தமான சந்திப்பு.

கே:- வருமான வரி சோதனையில் மத்திய அரசு தலையீடு உள்ளதா?

ப:- மத்திய அரசு தலையீடு இருப்பதாக தெரியவில்லை. வருமான வரித்துறையினர் எந்த ஒரு விசாரணை நடத்தினாலும் பரவாயில்லை. தமிழக அரசு மீது எந்த தவறும் இல்லை. அரசு மீது எந்த அழுத்தமும் இல்லை.

கே:- திருப்பூரில் உங்கள் கட்சி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்தாரே?

ப:- உண்ணாவிரதத்தை அவரே முடித்து விட்டு போய் விட்டாரே.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version