political

முதலில் முதல்வர்; அடுத்து சட்டப்பேரவைச் செயலாளர்- விஜயபாஸ்கர் அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு!

முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திடீரெனச் சந்தித்துப் பேசினார். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்குப் பின்னர் நடந்த சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 12 நாள்களாக தலைமைச் செயலகம் செல்லாமல் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று காலை திடீரென தலைமைச் செயலகம் வந்தார்.

முதல்வர் பழனிசாமியை முதலில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு, சில நிமிடங்களே நடந்தது. இதையடுத்து, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனை விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பும் சில நிமிடங்களே நடந்தது.

முன்னதாக, ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். அடுத்து, முதல்வர் பழனிசாமியையும் சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.