புதுடெல்லி:
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. அதேசமயம் மாநில அரசும் இதுபற்றி எந்த திட்டவட்டமான முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனப் பேக்கினைக் கடைப்பிடிக்ககூடாது என அறிவுறுத்தியது.
விவசாயிகள் பிரச்சினையில் மாநில அரசாங்கம், அமைதியாக இருப்பது சரியான அணுகுமுறையல்ல, இதனை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் கூறியது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.