புதுடெல்லி:
விவசாயிகள் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 28-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மொட்டை அடித்து உள்ளிட்ட பல்வேறு நூதன போராட்டங்களை தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் அலுகத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனு அளித்த பின்னர் வெளியே வந்த விவசாயிகள் திடீரென ஆடைகளை களைந்து போராட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “பிரதமர் எங்களை பார்க்காததால் ஆடையின்றி போராட்டம். இதுவரை பிரதமர் எங்களை சந்திக்காததால் எங்களுக்கு வேறு வழியில்லை. பிரதமரை சந்திக்க வைப்பதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தான் எங்களது நிலைமை” என்று கூறினார்.
பிரதமர் அலுவலகம் முன்பாக திடீரென தமிழக விவசாயிகள் நிர்வாணமாக ஓட ஆரம்பித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி முன்பு போராடிய போது பிரதமரை சந்திக்க வைப்பதாக டெல்லி போலீசார் தமிழக விவசாயிகளிடம் கூறியதாக தெரிகிறது. அதற்பின் இன்று தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் பிரதமர் அலுவலகம் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.