ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரு மெட்ரோ ரெயிலில் குண்டு வெடித்ததில் 2 பெட்டிகள் கடும் சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் ரஷிய குடியுரிமை பெற்றவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுவரை எந்தவொரு அமைப்பும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில், இந்திய மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர் என ரஷிய அதிபர் புதினுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரெயில் நிலைய குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாத அச்சுறுத்தலை உடனடியாக அழிக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டியுள்ளது.
இந்த கடினமான சூழ்நிலையில் இந்திய மக்கள் ரஷிய மக்களுக்கு உறுதுணையாக இருப்பர். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.