Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கர்நாடகத்தில் 20-ந் தேதி மதுபான கடைகள் மூடல்: மதுபான வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

பெங்களூரு:

கர்நாடக மாநில மதுபான வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குருசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரம் வரையில் உள்ள மதுக்கடைகள் மற்றும் மதுபான விடுதிகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் 6 ஆயிரத்து 18 மதுபான கடைகள் மற்றும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த விஷயத்தில் உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு ஜனாதிபதி மூலமாக மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மேலும் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்ற வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் வருகிற 20-ந் தேதி மதுபான கடைகள் மூடப்படும். அன்றைய தினம் அனந்தராவ் சர்க்கிளில் இருந்து முதல்-மந்திரி வீட்டுக்கு ஊர்வலமாக சென்று, சித்தராமையாவிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மதுக்கடைகளை திறந்தால், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் நிலை ஏற்படும். இதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குருசாமி கூறினார்.

Exit mobile version