Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கடந்த 55 வருடங்களில் இதுபோல மோசமான ஆட்சியைப் பார்த்ததில்லை: சித்தராமையாவைத் தாக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா

 மைசூர்:

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா தனது கட்சிப் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருப்பதாகவும், மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, கடந்த மார்ச் 22-ம் தேதி பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரி அனந்த குமார் ஆகியோரது முன்னிலையில் பா.ஜ.க.வில் முறைப்படி இணைந்தார்.

இந்த நிலையில், கடந்த 55 வருடங்களில் கர்நாடகத்தில் இதுபோல மோசமான ஆட்சியைப் பார்த்ததில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையாவை எஸ்.எம்.கிருஷ்ணா விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இது போல ஒரு மோசமான அரசாங்கத்தை நான் எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்ததில்லை. நான் முதல்வராக இருந்த  (1999- 2004) காலத்தில் அசீம் பிரேம்ஜி(விப்ரோ), நாராயணமூர்த்தி(இன்போசிஸ்) ஆகியோர் பெங்களூரில் தொழில் தொடங்கினர். இதனால் ஐ.டி மையமாக பெங்களூர் உருவெடுத்தது. மதிய உணவுத் திட்டத்தையும் நான் தான் அறிமுகம் செய்தேன். ஆனால், தற்போதைய கர்நாடக அரசிடம் தொலைநோக்குப் பார்வையில்லை.

நான் அதிகாரத்தை ஒருபோதும் விரும்பியதில்லை. மேலும், பிற மாநிலங்களில் இருந்து எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதும் எனது விருப்பம் அல்ல. நான் பா.ஜ.க-விலிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version