வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
லாரிகள் ஓடாததால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சரக்கு போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன. வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடித்த நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழக லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் என அமைச்சர் உறுதி அளித்தார். இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டதால், சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக அளிவில் மட்டும் தற்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பேச்சுவார்த்தையைப் பொருத்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.