political

உள்ளாட்சிகளுக்கு இட ஒதுக்கீட்டை முடித்தால் தேர்தலை நடத்த தயார்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்

சென்னை:

தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த போது, இப்படி ஒரு இடைக்கால உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது.

ஆனால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க முடியாது என்று கூறி வந்தது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஒரு மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தொகுதிகளை வரையறை செய்ய வேண்டியதுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாக்காளர்களின் விவரங்களை பெற்று, அதை தொகுதி வாரியாக பிரித்து, தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் வாக்காளர்கள் பட்டியலை தயாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, மே 14-ந்தேதிக்குள் தேர்தலை நடத்த இயலாது. இந்த தேர்தலை ஜூலை இறுதிக்குள் நடத்தி முடிக்க அனுமதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் நியமிக்கப்பட்டுவிட்டார். அவரை, ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்பேன் என்று உத்தரவாதம் அளித்து, பிரமாண மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வாதிட்டார்.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம், உத்தரவாதம் அளித்து பிரமாண மனுவை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில, மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர், உத்தரவாத மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதிகளை இடஒதுக்கீடு அடிப்படையில் வரையறை செய்ய வேண்டியதுள்ளது. இந்த பணியை தமிழக அரசு செய்து முடிக்க வேண்டும்.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு விட்டால், ஜூலை மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.