political

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை

அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தொடங்கிய அரசியல் பரபரப்பு 8 மாதங்களாக நீடித்து வருகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி பெயரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. கட்சி பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்க இணைந்து செயல்பட தயார் என்று இரு அணி தலைவர்களும் அறிவித்தனர்.

அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் என்று சொன்ன அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய நிபந்தனையாக தினகரன் குடும்பத்தை கட்சியிலும், ஆட்சியிலும் தலையீடு செய்ய விடாமல் ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இதில் தினகரனை ஒதுக்கி வைக்கும் நிபந்தனையை அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இது தங்களது தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்தார்.

இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய வி‌ஷயங்கள், நிபந்தனைகள் பற்றி இரு அணி தலைவர்களும் ஆதரவாளர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார். இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்து பல கட்ட பேச்சு நடத்தினார்கள். இன்று 2-வது நாளாகவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இரு அணியிலும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தனித்தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியில் கே.பி.முனுசாமி தலைமையிலும் குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் இடம் பெற்று இருக்கும் நிர்வாகிகள் விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சு வார்த்தையை தொடங்குகிறார்கள். தலைமைக் கழகத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. முன்னதாக இரு அணியைச் சேர்ந்தவர்களும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும், அதுவரை 7 பேர் கொண்ட குழு அமைத்து கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும், ஓ.பன்னீர் செல்வத்தை முதல்-அமைச்சராக்கி எடப்பாடி பழனிசாமியை துணை முதல்-அமைச்சராக்க வேண்டும். மாபா.பாண்டியராஜன் மற்றும் சிலருக்கு அமைச்சரவையில் இடம், மத்திய பா.ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் விரும்புகிறார்கள்.

இதில் போயஸ் கார்டனை நினைவிடமாக்குவது, அமைச்சரவையில் ஓ.பி.எஸ். அணிக்கு இடம் அளிப்பது ஆகிய கோரிக்கைகளை ஏற்க எடப்பாடி பழனிசாமி அணியினர் சம்மதித்து விட்டனர்.

முதல்-அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் மட்டும் தான் சிக்கல் நீடிக்கிறது. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது அவரால் முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என்று அவரது அணியினர் விரும்புகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனால் மத்திய அரசிடம் இணக்கமாக செல்லும் நிலை ஏற்படும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அவரை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நடுநிலை வகித்தாலும் அவர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் என்ற பெயர்தான் இருக்கும், எனவே ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சராகவும் ஆட்சியை வழி நடத்தலாம் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் இதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். தங்களிடம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே 3 முறை முதல்-அமைச்சராக இருந்து விட்டார், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகி 2 மாதம்தான் ஆகிறது.

அதற்குள் அவரை விலகச் சொல்வது சரியாக இருக்காது. எனவே எடப்பாடி பழனிசாமியே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொது செயலாளராக வழி நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என்பதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்.

அவருக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து இருக்கிறார். எனவே மாற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தம்பித்துரை கூறினார்.

இதுபற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘‘கட்சியை விட்டு தினகரன் வெளியேறி விட்டதாக கூறி இருக்கிறார். எனவே முதலில் இரு அணியினரும் இணைய வேண்டும். அதன்பிறகு மற்ற நிபந்தனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’’ என்றனர்.

இரு அணியினரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நாளைக்குள் முடிவு எட்டப்படும் என்று தெரிய வருகிறது.