political

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக தேர்தல் கமி‌ஷனின் 29 பக்க விளக்கம்

சென்னை:

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது.

இதற்கான உச்சக்கட்ட பிரசாரம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் தேர்தல் விதிமீறல் அடிப்படையில் இடைத்தேர்தலை திடீரென்று தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்து நேற்று இரவு அறிவித்தது.

தேர்தலை ரத்து செய்தது ஏன் என்பது தொடர்பாக 29 பக்க விளக்க அறிக்கையை தேர்தல் கமி‌ஷன் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடைபெற்றன. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பும் போடப்பட்டது.

மாநில போலீசாருடன், மத்திய ரிசர்வ் படை போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகளும் தொடங்கப்பட்டன.

256 வாக்குச்சாவடிகளுக்கு 256 நுண்பார்வையாளர்களாக மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர தேர்தல் நடத்தும் பணியில் மத்திய அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

12-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியிலும், வெளியேயும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரவு நேர ரோந்துப் பணியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அரசியல் கட்சிகள் புகார்களின் அடிப்படையில் 22 போலீஸ் அதிகாரிகளும், 18 வருவாய்த் துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். மேலும் ஒரு உதவி கமி‌ஷனர், 2 நிர்வாக என்ஜினீயர்கள், 4 உதவி நிர்வாக என்ஜினீயர்கள், 4 உதவி என்ஜினீயர்களும் இட மாற்றம் செய்யப்பட்டார்கள்.

தேர்தல் பணிக்கு அரசுத் துறை வாகனங்களை அமைச்சர்களோ, அரசியல் தலைவர்களோ பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்தது.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாகவும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன், பிரீபெய்டு போன் ரீச்சார்ஜ் கூப்பன்கள், பால் டோக்கன்கள், வாக்காளர்களின் வங்கி கணக்குகளை பெற்று அதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துதல் போன்றவை நடைபெறுவதாக தேர்தல் பார்வையாளர்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து வாக்காளர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. ரீசார்ஜ் செய்யும் மொபைல் நிறுவனங்கள், பால் விற்பனையாளர்கள் ஆகியோரும் கண்காணிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட சில பகுதிகளில் டோக்கன்கள் மூலம் அதிக அளவில் பொருட்கள் விற்பனையாவதை வணிக வரித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இது தொடர்பான புகார்கள் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 7-ந்தேதி வரை தேர்தல் பணப்பட்டுவாடா, தொடர்பாக நடைபெற்ற சோதனையில் ரூ.18 லட்சத்து 80 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பணம் தவிர விளக்குகள், டி.‌ஷர்ட்கள், சில்வர் தட்டுகள், செல்போன்கள், புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அ.தி.மு.க. அம்மா அணியினர் மிகப்பெரிய அளவில் தொப்பிகள், தலையை மூடக்கூடிய துணிகளை தொகுதி முழுவதும் சப்ளை செய்துள்ளனர்.

ஒரு நிறுவனத்திடம் இருந்து 1000 தொப்பி ரூ.30 ஆயிரம் விலையில் மொத்தம் 10 ஆயிரம் தொப்பிகள் ரூ.3 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதே போல் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் கட்சி சின்னத்துடன் கூடிய டி.‌ஷர்ட்டுகள் விநியோகம் செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த மணி என்பவர் பிடிபட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 டி.‌ஷர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்தவர்களை பறக்கும் படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே வரி ஏய்ப்பு மற்றும் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களிலும், சென்னையில் 11 இடங்களிலும் சோதனை நடத்தினார்கள்.

அவருடன் தொடர்புடைய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய பங்காற்றியிருப்பது தெரிய வந்தது.

அவரது கணக்காளர் சீனிவாசனிடம் இருந்து ரூ.89 கோடி பணம் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய இருப்பதற்கான துண்டு சீட்டுகள் கைப்பற்றப்பட்டது.

இதே போல் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீட்டில் இருந்தும் பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இதுவும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பணம் சிக்கியது. எம்.எல். ஏ.க்கள் விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் இருந்து பணப்பட்டுவாடா தொடர்பான பட்டியல் சிக்கியது. அதில் முன்னணி நிர்வாகிகள் வார்டு வாரியாக , பாகம் வாரியாக ஒவ்வொரு வாக்காளருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்ற குறிப்பும் இடம் பெற்று இருந்தது.

வருமான வரித்துறை நடத்திய சோதனையின் மூலம் மொத்தம் ரூ. 89 கோடி பணம் விநியோகம் நடைபெற இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதே போல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தொடர்ந்து நடத்திய சோதனையில் சுமார் ரூ.31.91 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரிசு பொருள் விநியோகம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தேர்தல் பொது பார்வையாளர், சிறப்பு பார்வையாளர் ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் கமி‌ஷனுக்கு சவால் விடும் வகையில் பண பலம், தேர்தல் விதிமீறல், சட்டம்-ஒழுங்கு மீறல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்றவை நடப்பதாகவும், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி தலைவர்கள் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுவதாக தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணப்பட்டுவாடா சம்பந்தமாக புகார்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி வருமான வரித்துறை சோதனை நடத்தி தேர்தல் கமி‌ஷனிடம் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது.

இந்த அறிக்கைகளையெல்லாம் கவனமுடன் தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை செய்தது.

தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் கமி‌ஷன் உறுதியாக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரை தேர்தல் விதிமீறல்களில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும், கட்சி தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் மற்றும் பரிசு பொருள் கொடுத்து இருக்கிறார்கள்.

இதற்கு முன் கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது இதே போன்ற சூழ்நிலை அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஏற்பட்டபோது அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு பின்னர் நவம்பர் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

இதையெல்லாம் மூத்த அரசியல் தலைவர்களும், கட்சிகளும் புறந்தள்ளி விட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆர்.கே.நகரில் இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வருகிற 12-ந் தேதி நடைபெற இருந்த வாக்குப்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

இப்போதைய நிலையில் ஆர்.கே.நகரில் பணப்பட்டு வாடா, பரிசு பொருள் விநியோகம் தொடர்பான அனைத்தும் முதலில் அகற்றப்பட வேண்டும். அதன் பிறகு நியாயமாகவும், நேர்மையான முறையிலும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை உருவான பின்புதான் அங்கு தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் கமி‌ஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்வதற்கான முடிவை தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசிம்ஜைதி, தேர்தல் கமி‌ஷனர்கள் ஓ.பி.ரவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் ஒருமனதாக எடுத்து உத்தரவில் கையெழுத்திட்டுள்ளனர்.