கடந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞரும், பாடகருமான பாப் டிலனுக்கு (வயது 75) தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை நோபல் குழு அறிவித்தது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. எனவே, அவருக்கான நோபல் பரிசுக்கான சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு நோபல் அகாடமியிடமே உள்ளது.
விருதுக்கு தேர்வு பெற்ற பாப் டிலன் எங்கு இருக்கிறார்? என்ற விவரம் அப்போது தெரியாமல் இருந்தது. தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. எனவே, அவர் தனது நோபல் பரிசு மற்றும் ரொக்கப்பரிசை ஜூன் 10-ம் தேதிக்குள் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்குள் வராவிட்டால் பரிசுத்தொகையை இழக்க நேரிடும் என்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கிவரும் ஸ்வீடன் அகாடமி எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இசை சுற்றுப்பயணம் செய்துவந்த பாப் டிலன் நேற்று ஸ்டாக்ஹோம் நகருக்கு வந்தார். அங்கு இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திய அவர் நோபல் பரிசுக்கான பதக்கத்தையும், பாராட்டு பட்டயத்தையும் பெற்று கொண்டார். ஆனால், பரிசினை பெற்று கொண்ட அவர் ஏற்புரை ஏதும் நிகழ்த்தவில்லை. எனவே, அவருக்கு அளிக்கப்பட வேண்டிய ரொக்கப்பரிசுத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஸ்டாக் ஹோம் நகரில் இரண்டாவது இசை நிகழ்ச்சியை நடத்தும் பாப் டிலன், ஏற்புரை ஆற்றி பரிசுத் தொகையான 8 லட்சத்து 91 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.