புதுடெல்லி:
ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகைக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர்டெல் புதிய அறிவிப்புகளின் படி மூன்று சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345 விலையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ஏர்டெல் சலுகைகளின் கீழ் ரூ.244 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஏர்டெல் சிம் வைத்திருப்போருக்கு மட்டும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் ஏர்டெல் – ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.
வாரம் முழுக்க 1200 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும் நிலையில், இதற்கு பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.10 என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் ரூ.399 திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் விலை அதிகம் என்பதால் முந்தைய திட்டத்தில் வழங்கப்படுவதை விட வாய்ஸ் கால் நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.244 திட்டத்தை போன்று ஏர்டெல் – ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைுப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.
இறுதியில் ரூ.345 திட்டத்தில் முந்தைய திட்டங்களை விட கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவும் மற்ற சலுகைகள் ரூ.399-இல் வழங்கப்படுவதை போன்றே வழங்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் ஆப் கொண்டு லாக்-இன் செய்து ஏர்டெல் தளத்தில் ரூ.244 மற்றும் ரூ.399 திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.