political Uncategorized

புதுச்சேரி, சிதம்பரத்தில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகை கடைகளில் 50 அதிகாரிகள் அதிரடி விசாரணை: சசிகலா, தினகரன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் சிக்கின .

புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் கார்கள் அம்பலத்தடையார் மடத்து வீதியில் நிறுத்தப்பட்டன.   –  படம்: எம்.சாம்ராஜ்

சசிகலா, தினகரன் தொடர்புடைய வருமான வரி சோதனையின் முக்கிய அங்கமாக புதுச்சேரி மற்றும் கடலூரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் 3-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.

புதுச்சேரியில் 13 கார்களில் நேற்று வந்த அதிகாரிகள் குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி சிதம்பரம் கிளையிலும் நேற்றும் சோதனை நடந்தது. இரு கடைகளிலும் 50 அதிகாரிகள் நேற்று இந்த சோதனையை நடத்தினர்.

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் தங்க நகை விற்பனை கடை, வெள்ளி நகை விற்பனை பிரிவு தனித்தனியாக இயங்கி வருகின்றன. மேலும், அதே பகுதியில் இந்த ஜூவல்லரிக்கு சொந்தமான பணப் பரிமாற்றம் நிறுவனம் ஒன்றும் உள்ளது. இதன் உரிமையாளர், தினகரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

3-ம் நாளாக நேற்றும் கடைக்கு வந்த ஊழியர்கள் யாரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

500, 1000 ரூபாய் பண மதிப்பிழப்பு காலங்களில் பணப் பரிமாற்றம் செய்ததில் இந்த நகைக்கடை உரிமையாளருக்கும் தினகரனுக்கும் பெரிய அளவில் பணபரிமாற்றம் நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு வந்த தகவலின் பேரில் இந்த அளவுக்கு சோதனையில் தீவிரம் காட்டப்படுவதாக தெரிகிறது. இக்கடை உரிமையாளருக்கு தினகரனிடம் இருந்து பணம் கைமாறியதாகவும், அதன் மூலம் தங்கத்தில் முதலீடு நடந்ததாகவும் தெரிகிறது.