இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடினார். தற்போது உலக கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சுரேஷ்ரெய்னா முத்திரை பதித்து வருகிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் செஞ்சூரி அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ரெய்னாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மணமகள் பெயர் பிரியங்கா சவுத்திரி. உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர்.
சுரேஷ் ரெய்னா தாயின் நெருங்கிய தோழியின் மகள் ஆவார், குழந்தையாக இருக்கும்போதே இருவரது குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. பின்னர் பிரியங்காவின் குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அதன்பிறகு இரு குடும்பத்துக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போனது.
சில வருடங்களுக்கு முன்பு இருவரது குடும்பத்தினரும் ஒரு விழாவில் சந்தித்துக்கொண்டனர். அப்போது மீண்டும் நட்பு ஏற்பட்டது. பிரியங்காவை பெரிய பெண்ணாக பார்த்த ரெய்னாவின் தாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு ரெய்னாவும் சம்மதித்து விட்டார். மணமகள் பிரியங்கா தற்போது ஆலந்து நாட்டில் பணிபுரிகிறார்.
ரெய்னா–பிரியங்கா திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் 3–ந்தேதி டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நடக்கிறது. உலக கோப்பை இறுதிப்போட்டி வருகிற 29–ந்தேதி நடக்கிறது. மறுநாள் இந்திய அணி டெல்லி திரும்புகிறது.
ஏப்ரல் 1–ந்தேதி ரெய்னா தனது நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறார். 3–ந்தேதி நடைபெறும் திருமணத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சுரேஷ் ரெய்னா, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியானது. அதன்பிறகு அனுஷ்காசர்மா கோலியுடன் இணைந்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.