பெங்களூரு:
கர்நாடக மாநில அரசுக்கு சமூக நல ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வக்கீல்களுக்கு எவ்வளவு கட்டணம் கொடுக்கப்பட்டது என்று கேட்டிருந்தார்.
இதற்கு கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் அலுவலகம் பதில் அளித்திருந்தது. அந்த பதிலில் கூறி இருப்பதாவது:- மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வக்கீல்களுக்கு ரூ.2 கோடியே 78 லட்சம் செலவு செய்துள்ளது. இதில் வக்கீல் ஆச்சார்யாவுக்கு ஒரு கோடியே 6லட்சமும், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே என்பவருக்கு ரூ.95 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது. வக்கீல் ஜோசப் அரிஸ்டாடிலுக்கு ரூ.32 லட்சமும், வக்கீல் சந்தோஷ் சவுதாவுக்கு ரூ.42 லட்சமும், கர்நாடக அட்வகேட் ஜெனரல் மதுசூதனன் ஆர்.நாயக் என்பவருக்கு ரூ.2 லட்சத்து 43ஆயிரமும் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.