World

அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வாங்கி தந்த போலீஸ்

நியூயார்க்: தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள ஃபெயேட்டேவில்லி பகுதியை சேர்ந்தவர், கிளாரன்ஸ் பிளாக்மோன்(81) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என டாக்டர்கள் தேதி குறித்துள்ள நிலையில் உதவிக்கு யாரும் இல்லாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த கிளாரன்ஸுக்கு திடீரென கடுமையான பசி, வீட்டில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லை. சக்கர நாற்காலியில் உலாவி வந்த கிளாரன்ஸால் அக்கம்பக்கத்தாரிடமும் கேட்க இயலவில்லை.  
எனவே, விபத்து மற்றும் போலீஸ் அவரசர உதவி சேவை மைய அழைப்பு எண்ணான ‘911’-ஐ தொடர்பு கொண்டு தனக்கு மிகவும் பசிக்கின்றது, ஏதாவது உதவி செய்ய இயலுமா? என்று கேட்டார். கிளாரன்ஸின் போனை எடுத்த பெண் அதிகாரி, பொறுமையாக அவருக்கு என்ன வேண்டும் என்ற விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் மற்றொரு போலீஸ் அதிகாரி மூலம் கிளாரன்ஸ் கேட்ட உணவுப் பொருட்களை அவர் கொடுத்தனுப்பினார். கிளாரன்ஸ் பிளாக்மோனுக்கு உணவுப் பொருட்கள் வாங்கி தந்த பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் கிளாரன்ஸ் பிளாக்மோனுக்கு ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.