இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி பிறந்தவர் ஹிட்லர். இவருடைய தந்தையின் பெயர் அலாய்ஸ் ஷிக்கிள் கிரப்பர் ஹிட்லர். இவர் சுங்க இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாவது மனைவியான கிளாராவின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக இருந்தார். அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகுதான் உடம்பு தேறியது.
அலோய்ஸ் கண்டிப்பான தந்தை. தந்தை சுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால், அடிக்கடி வெளிஊர் சென்றுவிடுவார். அதனால், ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம். தாய் மீது மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவர் ஹிட்லர். பள்ளியில் படிக்கும்போது, ஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர். அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார். ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது.
ஹிட்லர் படிப்பில் ஆர்வம் குறைந்தது. படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. விரைவிலேயே அழகாக படங்கள் வரையும் ஆற்றல் பெற்றார். மாணவப் பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.
குடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார். ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். “அடால்ப்,” என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம். அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து ‘அட்டென்ஷ’னில் நிற்க வேண்டும்.
1903-ம் ஆண்டு, ஹிட்லரின் தந்தை இறந்து போனார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர், நாளுக்கு நாள் முரடனாக மாறினார். மாணவர்களுடன் சண்டை போடுவதுடன், ஆசிரியர்களுடனும் மோதுவார்.
தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். ஹிட்லர் அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார். சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார்.
இதை அறிந்த ஆசிரியர், அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார். “இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்” என்று சபதம் செய்தார், ஹிட்லர். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவில்லை.
மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.
பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் ‘Art Academy’ யில் சேரவே தாயை பிரிந்தார். ஆனால் அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார்.
அடுத்த வருடமும் ஓவியப் பள்ளியில் சேர முயற்சி செய்தார். ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்து போனார்.
அவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது.
ஹிட்லர் அதன்பின் ஓவிய அட்டைகள் தயாரித்து, பிழைப்பு நடத்தினார் ஹிட்லர். இரவில் கூட மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த படங்கள், நல்ல விலைக்குப் போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தார். இந்தச் சமயத்தில், சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். காதல் தோல்வி அடைதார்,
இக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார். தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான் தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார். இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்.
பணம் கரைந்தது. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார். வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது ‘ஹீரோ’ ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அப்போதுதான். ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.
1914-ல் தொடங்கி, 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் போது ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார். அங்கே அவருக்கு ‘ரன்னர்’ பணி தரப்பட்டது.
முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் ‘ரன்னர்’ பணி. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான். அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு ‘Iron Cross’ என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது.
ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் ‘மஸ்டர்ட்’ வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் ‘துரோகம் இது’ என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். “கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!” என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.
மருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த ‘தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி’ யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான். அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே ‘நாஜி’. இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது. மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது.
1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். ‘ஸ்வஸ்திகா’ சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.
அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும், வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.
1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ஹிட்லருக்கு முதலில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஓராண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டது. முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான்.
சிறையில் இருந்தவாறு ‘எனது போராட்டம்’ ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். இது உலகப் புகழ் பெற்ற நூல். ‘இனம்’ என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.
அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
1928-ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை “நாஜி கட்சி” என்று மாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார். அவருடைய இடைவிடாத உழைப்பும், பேச்சுவன்மையும், ராஜதந்திரமும் வெற்றி பெற்றன. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு ‘சான்சலர்’ பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி. ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது.
அந்த சமயம் பாராளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க், மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தார். 1933-ஜனவரி 30-ந்தேதி ஹிட்லரை அழைத்துப் பிரதமராக நியமித்தார். கம்யூனிஸ்ட்களே இதற்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார்.
அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான். பிரதமராக இவர் பதவி ஏற்ற 1 வருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டு, எதிர்ப்பாளர்களை எல்லாம் ஒழித்துவிட்டு, ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதி பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சிகளை எல்லாம் தடை செய்தார். பாராளுமன்றத்தைக் கலைத்தார்.
எதிரிகளைச் சிறையில் தள்ளினார். “இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று அறிவித்தார். யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைது செய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். ராணுவத்தைப் பலப்படுத்தினார்.
ஜெர்மனியின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி, எந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
பிரிட்டனும், பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலி சர்வாதிகாரி முசோலினி.
ஜப்பான் உள்பட வேறு சில நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆப்பிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசிய ஒப்பந்தம்.
ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.
1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு “சூட்கேஸ்” இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். “இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?” என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில் ‘சர்’ என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.
மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. “அவரை தூக்கில் போட வேண்டாம்” என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். “அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!” என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.
சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா..!
“விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் ‘ஷோகேஸ்’கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று எச்சரித்தார் ஹிட்லர்.
வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.
1035 பக்கங்கள் கொண்ட ‘அடால்ப் ஹிட்லர்’ என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், “ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை “ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!” என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.
முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது. இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.
ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.
ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட ‘ஹைவேஸ்’ (Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.
முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.
“சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்” என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் ‘பெர்டினான்ட் பொர்ஷ்’-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு ‘வோக்ஸ்வேகன்’ என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.
தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti – Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.
பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.
பெண்களுக்கு ராணுவத்தில் பலப் பணிகளில் இடம் தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார். பெண்களை எப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லை ஹிட்லர். இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராக திகழ்ந்தார். குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார் ஹிட்லர்.
பல எதிரி நாடுகளை, கத்தியும் இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்கு புத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும் பெரிதும் உதவி செய்தன.
ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய ‘நாசா’ வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.
ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார்.
சர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும் உண்மைதான்.
ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான ‘ஆர்மி’யாக அது மாறியது. ‘நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்’ என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.
ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா. ‘ஜெர்மனி’ என்ற ஓர் நாட்டையே ‘சாடிஸ்ட் நாடு’ ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.
அரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம், இரக்கம், குற்ற உணர்வு யாவும் மறந்து மிருகங்களாக, கொலைக் கருவியாக மாறி மும்முரமாக இயங்கினார்கள். யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய ‘ஐக்மன்’ பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியது என்ன தெரியுமா. ‘ஐம்பது லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாத ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக் கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்’ என்றானாம். இவ்வாறு பலர் ஹிட்லரை கண்மூடித்தனமாக நம்பினார்கள்.
நாஜி அதிகாரிகள், ‘விஷவாயுக் குளியலறைகளை’ சொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர். ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும் ‘அறுவடை திருவிழா’ என்ற பெயரில் ஷாம்பெயின் பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள். யூதர்களை நிற்க வைத்து நெற்றியில் சுட்டால் பரிசு என்கிற ரீதியில் ‘துப்பாக்கி சுடும் போட்டி’ கூட நடத்தினார்கள், கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள்.
இறந்தவர்களின் பற்கள், எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும், சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டு, நடைபாதைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன.
‘யூதர்கள் மனிதர்கள் அல்ல. அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்!’ என்று அதிகாரிகள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். ‘ஆடு மாடுகளின் தோலைக் கொண்டு பைகள் செய்வதைப் போன்ற ஒரு செயல் தான் இதுவும்’ என எல்லோரும் நம்பினார்கள். இரும்பு இதயத்துடன் செயல் படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்கு திரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்து சொல்லப்பட்டது.
ஒருமுறை அனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களை கூட்டி வரச்செய்தார் ஹிட்லர். அவற்றை தன் கைகளால் சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். காரணம், ‘weakness’ என்பதே கூடாது என்பது தான் நாஜி தத்துவமாம். இத்தனையும் மீறி பல அதிகாரிகள் குற்ற உணர்வினால் அவதிப் பட்டார்கள் என்பதும் உண்மை.
நியாயம் – அநியாயம் பற்றிய சுய நினைவோடு, பகுத்தறிவோடு எடை போடும்போது தான், மிருகத்தன்மை அகன்று, ‘மனிதன்’ தலை எடுக்கிறான்! அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ் சிறைச் சாலையில் நிகழ்ந்தது. விஷவாயு செலுத்தப் பட்டு இறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின் உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். அப்போது ‘Gas Chamber’ இல் பல உடல்களுக்குக் கீழே பதினாலு வயதுப் பெண் கிடந்தாள், உயிரோடு.
பல உடல்கள் அவள் மேல் விழுந்து, விஷவாயு வீச்சிலிருந்து அவளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். உடனே அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஒருவர் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தார். பிறந்த மேனியோடு கிடந்த அந்த பெண்ணை தூக்கிவந்து, போர்வையால் ஆதரவோடு மூடினார் ஒருவர். சரேலென்று அனைவரிடமும் ஒரு மாற்றம். மிருகம் அழிந்து மனிதம் துளிர்த்தது. அந்தப் பெண்ணை தங்கள் குழந்தை போல் பாவித்து சிலர் கண் கலங்கினார்கள். அப்போது அங்கே நுழைந்தார், சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு.
விஷயத்தை மற்றவர்கள் விவரிக்க, நடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப் பார்த்தார். அவரது உதடுகள் லேசாகத் துடித்தன. விரல்கள் நடுங்க, கைத்துப்பாக்கியை எடுத்து, எல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில் வாங்காமல், அந்தப் பெண்ணை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றார். கொன்றதும் அவர்க் கூறியது என்ன தெரியுமா.
‘இந்தத் தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின் கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள் அனைவருக்கும்’ என்றானாம்.
ஆம். இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல் பட்டனர். அந்த அளவுக்கு, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது.
ஹிட்லரின் காதலி:-
ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
முசோலினியின் கோர முடிவு:
முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.
மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.
ரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.
இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.
கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.
ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்:
1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. “இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. “வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்” என்றாள்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.
சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: “வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்.” இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: “ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி”. இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: “முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்”. இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.
பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, “நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.
காதலியுடன் ஹிட்லர் தற்கொலை:-
ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள்.
ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல “மாக்சி” உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!