Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

வல்லவனுக்கு வல்லவன்: உலகம் முழுவதும் நடைபெறும் சைபர் தாக்குதலை ஒற்றறியும் ‘பலே உளவாளி’

புதுடெல்லி:
உலகில் ‘ இண்டர்நெட் வசதி பெற்ற அனைத்து சாதனங்களையும் (கேட்ஜெட்) உளவு பார்க்க முடியும்’. கோடிங் எனப்படும் சிறப்பு குறியீட்டு மொழியின் மூலம் இண்டர்நெட் துணையுடன் பிறரது தகவல்களை அபகரிப்பது ‘ஹேக்கிங்’ என்ற வார்த்தையின் பொருள்.
ஹேக்கிங் செய்வதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன, இவை ஒவ்வொரு நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடும். தகவல்களை திருடுவது, தேவையற்ற தகவல்களை அழிப்பது, சர்வர்களை இயங்க விடாமல் செய்வது, சர்வரை இயக்கி பல்வேறு தகவல்களை மாற்றியமைப்பது ஹேக்கிங் கலையின் சிறப்பம்சமாகும்.
பொதுவாக ஹேக்கிங் துறை உலகம் முழுக்க ஒவ்வொரு நொடியும் துடிப்புடன் இயங்கி வருகிறது என்றே சொல்லலாம். உலகில் ஹேக்கிங் சார்ந்த குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதே இதற்கு எடுத்துக்காட்டு. கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களின் வரிசையில், உட்கார்ந்த இடத்திலேயே பேரிழப்புகளை ஏற்படுத்த ஹேக்கிங் சிறந்த வழிமுறையாக இருந்து வருகிறது.
இவ்வாறு உலகம் முழுக்க இயங்கி வரும் ஹேக்கிங் அமைப்புகள் மற்றும் எவ்வித இயக்கத்திலும் சேராத ஹேக்கர்கள் நடத்தி வரும் சைபர் தாக்குதல்களை உலக வரைப்படத்தின் மூலம் நேரலையில் பார்த்து பிரமிக்கும் வசதியை அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் இணையத்தளம் ஒன்று நேரடி ஒளிபரப்பாக வழங்கி வருகிறது.
எந்த நாட்டில் உள்ள பிரபல இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது?, இந்த தாக்குதலை நடத்துபவரின் இண்டர்நெட் ப்ரோட்டோகால் முகவரி, இருப்பிடம், தாக்குதல் வகை மற்றும் ‘போர்ட்’ உள்ளிட்ட தகவல்கள் சைபர் தாக்குதல்களை நேரலையில் வழங்கும் இந்த தளத்தில் ஒவ்வொரு நொடியும் அப்டேட் செய்யப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையின்படி உலகில் சைபர் தாக்குதல்களை நடத்தும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அதிக சைபர் தாக்குதல்களை நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எட்டாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் எந்தெந்த பகுதிகளில் நடைபெறும் சைபர் தாக்குதல்களை அறிந்து கொள்ளும் விருப்பம் என்பதை உங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளும் வசதியும்  இந்த இணையத்தளத்தில் உள்ளது.
இதுபோன்ற சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஹேக்கிங் சார்ந்த குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றின் மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்புகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் இயங்கி வரும் பெரும் நிறுவனங்கள் சைபர் தாக்குதல்களின் மூலம் 20% வருவாய் இழப்பை  சந்தித்துள்ளதாக வருடாந்திர சைபர்செக்யூரிட்டி 2017 ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் சுமார் 50% அதிகமான நிறுவனங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Exit mobile version