Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இந்தியாவில் இருந்து ‘இந்தியா’விற்கு பிறந்த நாள் வாழ்த்து: பிரதமர் மோடியின் அசத்தல் டுவிட்

‘பிளஸ் 30’ என்று அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸின் மகள் ‘இந்தியா’விற்கு வித்தியாசமான முறையில் பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவின் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஜான்டி ரோட்ஸ். அவர் மைதானத்தில் பீல்டிங் செய்ய ஆரம்பித்து விட்டால், எதிரணி பேட்ஸ்மேன்கள் அவர் பக்கம் பந்தை அடிக்க யோசிப்பார்கள். அவரை சுற்றி ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் எவ்வளவு வேகத்தில் பேட்ஸ்மேன் அடித்தாலும் பந்தை தடுத்து விடுவார். அவர் பந்தை விட்டுவிட்டால் நேராக பவுண்டரிக்கு ஓடிவிடும்.

ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் மூலம் குறைந்தது 30 ரன்களுக்கு மேல் சேமித்து விடுவார். இதனால் அவரை செல்லமாக ‘பிளஸ் 30’ என்று அழைப்பார்கள்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்திய வீரர்களுடன் நெருங்கிய பழக்கம், பல இடங்களுக்கு சென்று வந்ததன் மூலம் இந்தியாவின் கலாச்சாரம் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவை அதிக அளவில் நேசிக்க ஆரம்பித்தார்.

அவரது மனைவிக்கு கடந்த கடந்த 2015-ம் ஆண்டு மும்பை சான்டாகுருஸில் உள்ள சூர்யா தாய் மற்றும் சேய் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்தியாவின் மீது அதிக பாசம் வைத்திருந்த காரணத்தினால் தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டிருந்தார்.

நேற்று ‘இந்தியா’விற்கு 2-வது பிறந்த நாளாகும். ஜான்டி ரோட்ஸ் தனது ‘இந்தியா’வுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை டுவிட்டரில் அப்லோடு செய்து ‘‘இந்தியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இன்றோடு உனக்கு இரண்டு வயத ஆகிறது’’ என்று பதிவிட்டிருந்தார்.

நாம் நாட்டின் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் லட்சக்கணக்கான ஆதரவார்கள் உள்ளனர். அவர்களுடன் பெரும்பாலும் டுவிட்டர் மூலம்தான் தனது கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வார். இதனால் டுவிட்டரில் எப்போதும் கவனம் செலுத்துவார்.

ஜான் ரோட்ஸ் செய்திருந்த டுவிட்டர் செய்தி மோடிக்கு தெரிய வந்தது. உடனே அவர் தனது பாணியில் ஜான்டி ரோட்ஸ் டுவிட்டருக்கு பதில் கொடுத்துள்ளார். அதில் ‘‘ ‘இந்தியா’விற்கு இந்தியாவில் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் டுவிட்டர் செய்தியை பார்த்து ஜான்டி ரோட்ஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அத்துடன் மோடிக்கு பதில் டுவிட் செய்துள்ளார். அதில் ‘நன்றி மோடிஜி, இந்த மண்ணில் பிறந்த எனது மகள், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளாள்’’ என்று நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version