மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகள் பற்றிய வரலாற்று தகவல்..!
சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர்வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர்.அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை.
கடைசியாக சின்ன மருதுவின் இளையமகன் துரைச்சாமி. பதினைந்து வயது பாலகன். வயதைக் காரணம் காட்டி அவனைத் தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியைக் காணவைத்தது கொடுமை.
அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இரும்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.
இந்த மாவீரனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராகவளர்த்து உருவாக்கி விடுவான் என்ற பயம் பறங்கியருக்கு.. அந்த மாவீரனையும் சேர்த்து 72 பேரை சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டுமே காலில் இரும்பு குண்டு களைப் பிணைத்திருந்தார்கள்.
அந்த மாவீரன் தான் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்.
நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி சேக் உசேன் விளங்கினார் என வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு – 1971) கூறுகிறது.
மாவீரன் சேக் உசேனின் வீரம் :
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுக்கல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.
இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார். ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.
அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர். இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.
இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை, தெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன்தான்.
வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகம், நாட்டுப்பற்று, நிர்வாகத்திறன் என்று சகல விஷயங்களிலும் திறமை வேண்டும். அந்தச் செயலை செய்து தன்னை சிறந்த தமிழ்ப் போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.
சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர்மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையார்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்குச் சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.
இரும்பு குண்டுகள் பிணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்குத் தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டார். கடலிலேயே நாட்கள் பல கடந்தன.
சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்தத் தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுவார்கள் என்றே தெரியாது.
கிளிங்கர்கள் :
மாவீரன் சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேர்களின் உடல் முழுதும் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும்போது ‘கிளிங்! கிளிங்!’ என்ற சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்’ என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்ததால், அவரால் சிறிதுதூரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்குமேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.
எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவுகூட தராமல் காலம் தள்ளியது கொடுமை.
ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க, இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.
உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்கச் சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
நீண்ட மௌனத்திற்குப்பிறகு சேக் உசேன், ‘‘என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர, அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்’’ என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.
ஆனால் துரைச்சாமி, ‘‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை என் தாய் நாட்டிற்குத் தெரியப் படுத்துங்கள்’’ என்று ஒரு மனு கொடுத்தார் அது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.
இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, ‘‘எனது இராணுவ நினைவுகள்’’ என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும். இவ்வாறு, தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காய் போராடிய போராளிகளில் முஸ்லிம்கள் முதன்மையானவர்களாய் திகழ்ந்தனர்.