Sports

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது சானியா ஜோடி

 மியாமி:

அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடினார். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அரையிறுதியில் மார்ட்டினா ஹிங்கிஸ்-சான் யுங் ஜான் ஜோடியை 6-7, 6-1, 10-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சானியா-ஸ்டிரைகோவா ஜோடி, தரநிலையில் அவர்களை விட பின்தங்கியிருக்கும் காப்ரியலா டப்ரோவ்ஸ்கி- ஜு யிபான் ஜோடியை எதிர்கொண்டது.

அமெரிக்காவின் பெத்தானி மாட்டெக்குடன் இணைந்து சமீபத்தில் பிரிஸ்பேன் பட்டத்தை வென்ற சானியா, இந்த ஆண்டின் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சானியா ஜோடிக்கு கடும் அதிர்ச்சி கொடுத்த காப்ரியலா – யிபான் ஜோடி, 6-4, 6-3 என நேர்செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.