எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.
வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி’ போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.
இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், “வாலி” என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், “உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?” என்று கேலி செய்தார்.
உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, “வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?” என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.
அதைப் படித்த ஆசிரியர், “பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!” என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.
ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி’ ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.
நண்பர்களுடன் சேர்ந்து “நேதாஜி” என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் “கல்கி”, அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.
இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் “சில்பி” ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். “கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்” என்று சில்பி ஆலோசனை கூறினார்.
இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.
வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, “அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே” என்று வாலியைப் பாராட்டியதுடன், “பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்” என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.
கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.
சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.
ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-
“ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.
`மாடலிங்’காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.
அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்’ தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.
நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்’காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.
ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.
காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.
ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது “கமர்ஷியல் ஆர்ட்.” ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.
ஸ்ரீரங்கத்தில், “வாலி பப்ளிசிட்டீஸ்” என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. “கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.”
எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.