சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘பலே வெள்ளையத்தேவா’. பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். மேலும், இப்படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சோலை பிரகாஷ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
இப்படம் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில், படம் குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமார் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும்போது, குடும்ப உறவுகளை முழுநீள காமெடியுடன் சொல்லும் படமாக ‘பலே வெள்ளையத்தேவா’ உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ரோகிணி எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர்களை பார்க்கும் போது ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படம்போல் இருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கோவை சரளா எனக்கு பாட்டியும் கிடையாது. அவருக்கு நான் பேரனும் கிடையாது.
சங்கிலி முருகன், கோவை சரளாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் கோவை சரளா ராப் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டதும், அந்த பாட்டி கதாபாத்திரத்திற்கு மனோரமா ஆச்சிதான் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்குள் தோன்றியது. ஆனால், இப்போது ஆச்சி நம்மிடத்தில் இல்லை என்பதால், அதற்கடுத்தபடியாக சேச்சி கோவை சரளாதான் இதற்கு சரியாக பொருந்துவார் என்று அவரை அணுகினோம். அவரும் உடனே ஒத்துக் கொண்டார்.
படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைவிட கோவை சரளாவின் கதாபாத்திரம்தான் மிகவும் வலுவாக இருக்கும். தான்யா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தற்போது நிறைய இருக்கிறார்கள். ஆனால், கதாநாயகிகள் கிடைப்பதுதான் மிகவும் அரிதாக இருக்கிறது என்றார்.