ஆமிர் கான் வாழ்க்கை வரலறு- ‘ஆமிர் கான்’ என்று அழைக்கப்படும் ஆமிர் ஹுசைன் கான், இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவர். குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், இன்று வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல வெற்றிப் படங்களை பாலிவுட் திரையுலகிற்குக் கொடுத்திருக்கிறார். திரையுலகப் பின்னணியில் இருந்து வந்த அவர், பாலிவுட்டில் நடிகரென்ற ஒரு அந்தஸ்தோடு நிறுத்திக் கொள்ளாமல், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் தனது திறமைகளை வெளிபடுத்தியுள்ளார். இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்மபூஷன்’ போன்ற விருதுகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், 17 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்ககப் பரிந்துரைக்கப்பட்டு, 7 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், மூன்று தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இதைத்தவிர எண்ணிலடங்கா விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்று, தனக்கென உலகளவில் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி, இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஆமிர் கான் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 14 மார்ச் 1965 (வயது 48)
பிறப்பிடம்: மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தொழில்: திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
ஆமிர் கான், இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் மார்ச் மாதம், 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில், தாஹிர் ஹுசைன் மற்றும் ஜீனத் ஹுசைன் தம்பதியருக்கு மகனாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையான தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். மேலும் அவர், முஸ்லீம் அறிஞரும், அரசியல்வாதியுமான மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
ஆமிர் கான் அவர்களின் தந்தையைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலதலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் செயல்பட்டு வந்ததால், திரையுலகத் தாக்கம் அவரது ரத்தத்திலும் பாய்ந்தது எனலாம். பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் இருந்த நசீர் ஹூசைன், அவரது மாமா என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, அவருக்கு எட்டு வயதிருக்கும் போது, நசீர் ஹூசைன் அவரது படமான ‘யாதோன் கி பாராத்’ என்ற திரைப்படத்தில் 1973லும், ‘மாதோஷ்’ என்ற திரைப்படத்தில் 1973லும், ஆமிரை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, தனது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் அவர்கள், மகாராஷ்டிராவின் மாநில டென்னிஸ் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரையுலக வாழ்க்கை
பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திய ஆமிர் கான் அவர்கள், பதினோரு ஆண்டுகள் கழித்து, அதாவது 1984ல், கேதன் மேத்தா அவர்களின் படமான ‘ஹோலி’யில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் பெருந்தோல்வியைத் தழுவியதால், திரையுலகிற்குத் தேவையானத் திறமைகளை வளர்க்க விரும்பி, சிறிது காலம் இடைவெளி விட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது மாமா நசீர் ஹூசைனின் மகனான மன்சூர் கான் தயாரிப்பில் வெளிவந்த ‘கயாமத் சே கயாமத் தக்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து, அவருக்கு ‘முன்னணி இளம் நாயகன்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் ‘ராக்’ (1989), ‘லவ் லவ் லவ்’ (1989), ‘அவ்வல் நம்பர்’ (1990), ‘தும் மேரே ஹோ’ (1990), ‘தில்’ (1990), ‘தீவானா முஜ் செ நஹின்’ (1990), ‘ஜவானி ஜிந்தாபாத்’ (1990), ‘தில் ஹை கே மான்தா நஹின்’ (1991), ‘இசி கா நாம் ஜிந்தகி’ (1991), ‘தௌலத் கி ஜங்க்’ (1991) ‘ஜோ ஜீத்தா வோஹி சிக்கந்தர்’ (1992), ‘பரம்பரா’ (1993), ‘ஹம் ஹை ரஹீ ப்யார் கே’ (1993), ‘அந்தாஜ் அப்னா அப்னா’ (1994), ‘பாஜி’ (1995), ‘ஆதன்க் கி ஆதன்க்’ (1995), ‘ரங்கீலா’ (1995), ‘அகேலே ஹம் அகேலே தும்’ (1995), ‘ராஜா ஹிந்துஸ்தானி’ (1996), ‘இஷ்க்’ (1997), ‘குலாம்’ (1998), ‘சர்ஃபரோஷ்’ (1999), ‘மன்’ (1999), ‘எர்த் 1947 (1999), ‘மேளா’ (2000), ‘லகான்’ (2001), ‘தில் சாஹ்தா ஹை’ (2001), ‘மங்கள் பாண்டே: தி ரைசிங்’ (2005), ‘ரங்க் தே பசந்தி’ (2006), ‘ஃபனா’ (2006), ‘தாரே ஜமீன் பர்’ (2007), ‘கஜினி’ (2008), ‘3 இடியட்ஸ்’ (2009), ‘தோபி கட்’ (2011), ‘தலாஷ்: தி ஆன்சர் லைஸ் வித்தின்’ (2012) போன்ற படங்களில் நடித்தார்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக ஆமிர் கான்
2001ல், ‘ஆமிர் கான் ப்ரோடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார், ஆமிர் கான் அவர்கள். அதன் தொடக்கமாக, அவரது அடுத்த படமான ‘லகான்’ அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்தப் படம், பல்வேறு விருதுகளைப் பெற்று, நமது நாட்டிற்கும், ஹிந்தித் திரையுலகிற்கும் பெருமைத் தேடித்தந்தது. சில ஆண்டுகள் கழித்து, 2௦௦7ல் ‘தாரே ஜமீன் பர்’ என்ற படத்தை மீண்டும் அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படமும் பல விருதுகளைக் குவித்தது. 2௦௦8ல், அவரது சகோதரியின் மகனான இம்ரான் கானை வைத்து, ‘ஜானே து… யா ஜானே நா’ என்ற படத்தைத் தயாரித்தார். இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய அப்படம், ஃபிலிம்ஃபேர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 2011ல் ‘தோபி கட்’ என்ற படம் மற்றும் 2012ல் ‘தலாஷ்’ என்ற படத்தை அந்நிறுவனம் தயாரித்து, அதில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவ்விரு படங்களும், மாபெரும் வெற்றியைத் தழுவியது.
தொலைக்காட்சி வாழ்க்கை
ஆமிர் கான் அவர்கள், சமூக நலனில் மிகவும் அக்கறைக் கொண்டவர். ஆகவே, அவர், சமூக பிரச்சினைகளை மக்களின் நேரடி பார்வைக்கு எடுத்துரைக்கும் நேரடி உரையாடல் நிகழ்ச்சியான ‘சத்யமேவ் ஜெயதே’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார். இந்நிகழ்ச்சி, எட்டு மொழிகளில், ஸ்டார் ப்ளஸ், ஸ்டார் வேர்ல்ட், தூர்தர்ஷன் போன்ற தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இல்லற வாழ்க்கை
ஆமிர் கான் அவர்கள், தனது 21வது வயதில் ரீனா தத்தா என்ற ஹிந்து பெண்ணை காதல் புரிந்து, பல்வேறு மத எதிர்ப்புகளையும் கடந்து, ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி, 1986 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜுனைத் மற்றும் இரா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவர், லகான் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, டிசம்பர் 2002ல், ஆமிர் கான் விவாகரத்து கோரியதால், அவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர், டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி, 2005 ஆம் ஆண்டில், உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும், வாடகைத் தாய் மூலமாக ஆசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தான்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான ‘பத்மஸ்ரீ’ விருதை 2003 ஆம் ஆண்டிலும், ‘பத்மபூஷனை’ 2010 ஆம் ஆண்டிலும் பெற்றார்.
1989, 2001, 2008 ஆண்டுகளுக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகளை 1989ல், ‘கயாமத் சே கயமத்’ என்ற படத்திற்காகவும், 1997ல் ‘ராஜா இந்துஸ்தானி’ என்ற படத்திற்காகவும், 2002ல், ‘லகான்’ என்ற படத்திற்காக இரு முறையும், 2007ல் ‘ரங் தே பசந்தி’ என்ற படத்திற்காகவும், 2008ல் ‘தாரே ஜமீன் பர்’ படத்திற்காக இரு முறையும் பெற்றார்.
இதைத் தவிர, ஐந்து ஸ்க்ரீன் விருதுகளையும், மூன்று முறை ஐஐஎஃப்எ (IIFA) விருதுகளையும், கோலாபுடி ஸ்ரீனிவாச விருதையும், இரண்டு முறை பெங்கால் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்’ஸ் அஸ்ஸோசியஷன் விருதுகளையும், மூன்று முறை ஜீ சினி விருதுகளையும், இரண்டு முறை பாலிவுட் மூவி விருதுகளையும், ஸ்டார்டஸ்ட் விருதுகளையும், சர்வதேச இந்திய பட விருதுகளையும், மற்றும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
காலவரிசை
1965: மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலுள்ள பாந்த்ராவில் மார்ச் மாதம், 14 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1973: ‘யாதோன் கி பாராத்’ என்ற திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
1984: கேதன் மேத்தா அவர்களின் படமான ‘ஹோலி’யில் ஹீரோவாக அறிமுகமானார்.
1986: ரீனா தத்தா என்ற ஹிந்து பெண்ணை காதல் புரிந்து, பல்வேறு மத எதிர்ப்புகளையும் கடந்து, ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி, 1986 ஆம் ஆண்டில் கரம் பிடித்தார்.
1988: ‘கயாமத் சே கயாமத் தக்’ என்ற படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றியடைந்து, அவருக்கு ‘முன்னணி இளம் நாயகன்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.
2001: ‘ஆமிர் கான் ப்ரோடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.
2002: டிசம்பர் 2002ல், ரீனா தத்தாவிடம் விவாகரத்து கோரியதால், அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
2003: இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வென்றார்.
2005: டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி, 2005 ஆம் ஆண்டில், உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரை மணமுடித்தார்.
2010: இந்திய அரசு அவருக்கு ‘பத்மபூஷன் விருது’ வழங்கி கௌரவித்தது