ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Life History நடிகர்

ரஜினிகாந்த்

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘முரட்டுக்காளை’, ‘தில்லு முல்லு’ ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ ‘நான் சிவப்பு மனிதன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’ படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘மாப்பிள்ளை’ ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும். இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன். ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 12, 1949

இடம்: கர்நாடக மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், 

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘சிவாஜி ராவ் கைக்வாட்’ என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக ஒரு “மராத்தி” குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த் அவர்கள், பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” பள்ளிப்படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பயம் இல்லாதவாராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு, ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர், பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். காலப்போக்கில், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

திரைப்படத்துறையில் நடிகனாக ரஜினிகாந்த்  

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பனின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். 1975  ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது. இந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் ஸ்டைலினை, இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார். அதனை தொடர்ந்து ‘அவர்கள்’ (1977), ‘16 வயதினிலே’ (1977),  ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

கதாநாயகனாக ரஜினிகாந்தின் வெற்றிப் பயணம்

1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்.

‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘முரட்டுக்காளை’, போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக நடித்து புகழ் பெற்றார். 1981 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக வெளிப்படுத்தியிருப்பார். ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ மற்றும் ‘நான் சிவப்பு மனிதன்’ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” திரைப்படம் அவருக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது எனலாம். இப்படத்தில், இந்து சமயப் புனிதரான “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்” வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து, ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜாதி ராஜா’, ‘ராஜா சின்ன ரோஜா’, மற்றும் ‘மாப்பிள்ளை’ போன்ற திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.

1990 ஆம் ஆண்டுகளில் நடித்த ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், இவருக்கு இந்தியாவில் ‘சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தந்தது எனலாம். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த “முத்து” திரைப்படம், இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அம்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியையும் பெற்றது.

மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை என்றாலும், 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது. மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

ரஜினிகாந்தின் பிறமொழி திரைப்படங்கள்

ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.               ‘கதா சங்கமா’ (1976), ‘பாலு ஜேனு’ (1976),  ‘ஒண்டு பிரேமதா கதா’ (1977), ‘சகோதர சவல்’ (1977),  ‘குங்கும ரக்சே’ (1977), ‘கலாட்டா சம்சாரா’ (1977),  ‘கில்லாட் கிட்டு’ (1978),  ‘மாது தப்படமகா’ (1978), ‘தப்பிட தலா’ (1978), ‘ப்ரியா’ (1979), ‘கர்ஜனே’ (1981) போன்ற கன்னட மொழித் திரைப்படங்களிலும், ‘அந்துலேனி கதா’ (1976),  ‘சிலக்கம்மா செப்பண்டி’ (1977), ‘தொலிரேயி கடிட்சண்டி’ ‘(1977), ‘ஆமே கதா’ (1977), ‘அன்னடம்முளு சவால்’ (1978), ‘வயசு பிலிசிண்டி’(1978), ‘இதாரு அசாத்யுலே’ (1979), ‘அந்தமைனா அனுபவம்’ (1979), ‘டைகர்’ (1979), ‘அம்மா எவரிக்கைன அம்மா’ (1979), ‘ராம் ராபர்ட் ரஹீம்’ (1980), ‘மாயதாரி கிருஷ்ணடு’ (1980), ‘காளி’ (1980), ‘ஏதே நாசவல்’ (1984), ‘ஜீவன போராட்டம்’ (1986), ‘பெத்தராயிடு’ (1995) போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும், ‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ (1979), ‘கர்ஜனம்’ (1981) போன்ற மலையாள மொழித் திரைப்படங்களிலும், ‘அந்தா கானூன்’ (1983), ‘ஜீத் ஹமாரி(1983), மேரி அதாலத்(1984), கங்குவா(1984), ஜான் ஜானி ஜனார்தன்(1984), மஹா குரு’ (1985), ‘வஃபாதர்’ (1985), ‘பேவஃபாய்’ (1985), ‘பவான் தாதா’ (1986), ‘அசலி நகலி’ (1986), ‘தோஸ்தி துஸ்மன்’ (1986), ‘இன்சாப் கோன் கரேகா’ (1987), ‘உத்தர் தஷின்’ (1987), ‘தமாசா’ (1988), ‘பிரஸ்டார்ச்சர்’ (1989), ‘சால்பாஸ்’ (1989), ‘ஹம்’ (1991), ‘ஃபரிஸ்தே’ (1991), ‘கூன் கா கர்ஜ்’ (1991), ‘பூல் பனே அங்காரே’ ‘(1991), ‘தியாகி’ (1992), ‘இன்சானியத் கே தேவதா’ (1993), ‘ஆதங்க் ஹீ ஆதங்க்’ (1995) போன்ற இந்தி மொழித் திரைப்படங்களிலும், ‘பாக்கியதேவ்தா’ என்ற பெங்காலி மொழித் திரைப்படத்திலும் மற்றும் ‘பிளட் ஸ்டோன்’ (1988) என்ற ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அரசியல் தொடர்பு

1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த அ.இ.ஆ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அக்கட்சி தோற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதன் பிறகு, ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள் எழுப்பபட்டாலும், இன்றுவரை அவரிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.

ரஜினியின் இமயமலைப் பயணம்

ரஜினிகாந்த் அவர்கள், ஒவ்வொரு படம் முடித்து அந்த படம் திரைக்கு வந்ததும், இமயமலைக்குச் செல்வதையும், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா, பணம், புகழ் என பல சிகரத்தை தொட்டுப்பார்த்தாலும், அவருக்கான தேடல் ‘இமயமலை பயணம்’ எனக் கூறப்படுகிறது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்

தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ் என்றால், அனைவரின் மனத்திலும் நினைவுக்கு வருபவர், ரஜினிகாந்த் மட்டுமே. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பிலும், பஞ்ச் டயலாக்குகள் மூலமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் வெளிபடுத்திய ஒவ்வொரு டயலாக்கும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

  • 16 வயதினிலே திரைப்படத்தில், “இது எப்படி இருக்கு?”
  • “மூன்று முகம்” திரைப்படத்தில், “வத்திக்குச்சிக்கு இரண்டு பக்கம் உரசினாதான் தீ பிடிக்கும். ஆனா, இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்”
  • “முத்து” திரைப்படத்தில், “எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்.”    அண்ணாமலை திரைப்படத்தில், “கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது, கஷ்டபடாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது” மற்றும் “சொல்றதை தான் செய்வேன், செய்றதைதான்  சொல்லுவேன்”
  • “பாட்ஷா” திரைப்படத்தில் “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”
  • “பாபா” திரைப்படத்தில் “நா லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்” மற்றும் “அசந்தா அடிக்கிறது உங்க ஸ்டைல், அசராம அடிக்கிறது என் ஸ்டைல்”
  • “படையப்பா” திரைப்படத்தில், “என் வழி தனி வழி” மற்றும் “அதிகமா கோபப்படற பொம்பளையும், அதிகமா ஆசப்படற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல”
  • “சிவாஜி” திரைப்படத்தில், “பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல” மற்றும் “பண்ணிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கலாதான் வரும்”

குடும்ப வாழ்க்கை

“தில்லு முல்லு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். சென்னையிலுள்ள “எத்திராஜ் கல்லூரியில்” படித்துக் கொண்டிருந்தபொழுது, ரஜினியை பேட்டி எடுக்க லதா அவர்கள் சென்றிருந்தார். அந்த பேட்டியின்போதே “தன்னை மணக்க விருப்பமா?” என்று ரஜினிகாந்த் கேட்க, “வெட்கத்தோடு பெற்றோரிடம் கேளுங்கள்!” என்று லதா சொல்லிவிட்டார். பிறகு, ஒய்.ஜி மகேந்திரனின் உதவியுடன் (லதாவின் சகோதரி சுதாவை இவர் மணந்துள்ளார்) லதாவின் பெற்றோரிடம் சம்மதம் பெற்ற அவர்கள், 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவருக்கு ஐசுவர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.

விருதுகள்

  • 1978 ஆம் ஆண்டு “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “தமிழக அரசு திரைப்பட விருது” வழங்கப்பட்டது.
  • 1979 ஆம் ஆண்டு “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக “தேவர் விருது” வழங்கப்பட்டது.
  • 1984 ஆம் ஆண்டு “நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்காக “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1985 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி விருது” வழங்கப்பட்டது.
  • 1989 ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு “அண்ணாமலை” திரைப்படத்திற்காக “அம்பிகா விருது” வழங்கப்பட்டது.
  • “16 வயதினிலே” மற்றும் “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “அரிமா சங்கம் விருது” வழங்கப்பட்டது.
  • “நல்லவனுக்கு நல்லவன்”, “ஸ்ரீ ராகவேந்தரா”, “பிளட் ஸ்டோன்”, “தளபதி”, “அண்ணாமலை”, “வள்ளி”, “பாட்ஷா”, “முத்து” போன்ற திரைப்படங்களுக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது.
  • “முள்ளும் மலரும்”, “மூன்று முகம்”, “முத்து”, “படையப்பா”, “சந்திரமுகி”, “சிவாஜி” போன்ற திரைப்படத்திற்காக ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்’ வழங்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.

தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த் அவர்கள், திரையுலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார். தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.

 

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலறு .

CAIROCORPS