political

பணப் பட்டுவாடா விவகாரம்: தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரி இன்று வருகை

 சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக இதுவரை ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக உயர் அதிகாரிகள் அனைவரையும் மாற்றி விட்டு தொகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்த பிறகும், தங்கு தடையின்றி பணப் பட்டுவாடா நடந்திருப்பது அதிகாரிகளை ஆச்சரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையடுத்து பறக்கும் படைகள் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இந்த பணியை முடுக்கி விடுவதற்காக தேர்தல் கமி‌ஷனின் இயக்குனர் (செலவு) விக்ரம் பத்ரா இன்று (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்.

அவர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று நேரடியாக கள ஆய்வு பணிகளை செய்ய உள்ளார். அந்த கள ஆய்வுக்குப் பிறகு அவர் அனைத்து தேர்தல் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே 35 மத்திய பார்வையாளர்கள் ஆர்.கே.நகரில் ரோந்து சுற்றி வருகிறார்கள். வருமான வரித்துறையின் 10 குழுக்கள், 100 பறக்கும் படையினரும் பணியில் உள்ளனர்.

இந்த படைகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.