Technology

இந்தியர்கள் அதிகளவில் முதலீடு செய்வது எதில்?

இந்தியர்கள் அதிகளவில் எதில் முதலீடு செய்கிறார்கள் என்ற விவரத்தை அறிய செபி அமைப்பு சர்வே ஒன்றை நடத்தி இருக்கிறது. இந்த சர்வேயின் மூலம் பல முக்கியமான தகவல் கிடைத்திருக்கிறது. இதில், இந்தியாவில் 95% பேர் தங்களுடைய சேமிப்பை வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள். 10% பேர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள் என்று கண்டறிந்து இருக்கிறார்கள். 

இந்தியா முழுவதும் நகரப் பகுதியிலும், ஊரகப் பகுதியிலும் இந்த சர்வேயை நடத்தி இருக்கிறார்கள். வங்கி டெபாசிட்டுக்கு அடுத்து ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் மக்கள். அதற்கு அடுத்து தங்கத்திலும், அதற்கு அடுத்து அஞ்சலக சேமிப்பு கணக்கிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்தும் வருகிறார்கள்.

ஆறாவது இடத்தில் மியூச்சுவல் ஃபண்ட் (9.7%)  இடம்பிடித்து இருக்கிறது. ஏழாவது இடத்தில் (8.1%)  பங்குச்சந்தையில் முதலீடு செய்வது இடம்பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பென்சன் திட்டங்களிலும், நிறுவன டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றிலும் முதலீடு செய்வதாகச் சொல்கிறார்கள். ஒரு சதவீதம் பேர் மட்டும் காமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட்டத்தக்க வேண்டிய விஷயம், கிராமப்பகுதியில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்தும், பங்குச்சந்தை குறித்தும் 1.4% மட்டுமே அறிந்து இருக்கிறார்கள். இதில் 1%க்கும் குறைவானவர்களே மியூச்சுவல் பண்டிலும், பங்குச்சந்தையிலும் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால், 95% பேர் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பதாகவும், 47% பேர் ஆயுள் காப்பீடு செய்திருப்பதாகவும், 29% பேர் அஞ்சலகங்களில் கணக்கில் டெபாசிட் செய்திருப்பதாகவும், 11% தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்கி இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சர்வேயில் முக்கியமான விஷயம், கடந்த ஐந்தாண்டுகளில் 75% அளவில் புதிய முதலீட்டாளர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தான். இந்தியாவில் 3.37 கோடி முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். இதில் 70% நகரங்களில் இருக்கிறார்கள். ஒரு கோடி பேர் கிராமங்களில் இருக்கிறார்கள். இவர்களில் 66% பேர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். 1.9 கோடி பேர் பங்குச் சந்தையிலும், 77 லட்சம் பேர் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து இருக்கிறார்கள். காமாட்டிட்டியில் முதலீடு செய்பவர்களில் 30 லட்சம் பேர் பங்கு மற்றும் பண வர்த்தகத்திலும் முதலீடு செய்கிறார்கள். 21 லட்சம் பேர் பல்வேறு காமாடிட்டி பொருட்களில் முதலீடு செய்கிறார்கள்.

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களில் 18% பேர் (33 லட்சம் பேர்) பங்கு வெளியீட்டின் போது மட்டும் முதலீடு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். “இந்த சர்வே ஆராய்ச்சியில் உலக அளவில் பொருளாதார அளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து இருக்கிறது. இதனால் இந்திய முதலீட்டாளர்களின் குணயியல்புகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் செபியின் முன்னாள் தலைவர் சின்ஹா.

இந்த சர்வேயில் சில முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும் சில விஷயங்கள் மிகவும் புதியதாகவும் இருக்கிறது என்கிறார்கள். இணையத்தில் பங்கு வர்த்தகம் செய்வது அதிகரித்து இருக்கிறது என்றும் கண்டறிந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும் 78% பேர் பங்குத்தரகர்களின் அலுவலகங்களின் வழியாகவே முதலீடு செய்வதாகவும், இணையம் வழியாக 22% மட்டுமே பங்குகளை வாங்குவதும் விற்பனை செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இணையம் வழியாக முதலீடு செய்யாததற்கு இன்னமும் பெரிய அளவில் விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

முதலீட்டாளர்கள் 70% பேர் பொருளாதார திட்டமிடலுதலுக்கும், தங்களுடைய கணக்கினை பராமரிப்பதற்கும், பங்கு தரகர்களையும், துணை பங்குத்தாரகர்களையும் சார்ந்து இருக்கிறார்கள். பங்குத்தரகர்களின் மீது முதன்மையாக நம்பிக்கை வைக்கிறார்கள். அதன் வழியாகவே முதலீட்டு முடிவு எடுக்கிறார்கள்.

வர்த்தக நிறுவனங்கள் முதலீட்டாளர்களைப் பல விதமான டெக்னிக்கைப் பயன்படுத்தி ஈர்க்கிறார்கள். புதிய வாடிக்கையாளர்களை நேரிடையாக அலுவலகத்தில் சந்திக்க வைப்பது (52%), ஊடகங்களின் வழியாக விளம்பரங்களின் மூலமாக (51%) பேரையும், தொலைப்பேசி அழைப்பு வழியாக 50% பேரையும் முதலீடு செய்ய வைக்கிறார்கள். குறுச்செய்திகள் மூலம் (45%) பேரையும், சமூக வலைத்தளங்கள் மூலம் (17%) பேரையும் ஈர்த்து இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் ஈர்ப்பில் பின் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும், இணையப் பயன்பாடும் முதலீடு வளர்ச்சிக்கும், சந்தையில் பங்கேற்பதையும் அதிகப்படுத்த வேண்டும், அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவல். விரைவில் நிறைவேற்றட்டும்!